பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

அறத்தின் குரல்

கிடைத்துவிடப் போகிறதா?” வியாசர் கூறிய சொற்களால் மனம் தெளிந்த அசுவத்தாமன் பாசுபதாஸ்திரத்தை உபயோகிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். இவ்வளவில் போர் நேரமும் முடிந்துவிட்டது. சூரியன் அஸ்தமித்து விட்டான். இருசாராரும் பாசறைக்குத் திரும்பி விட்டனர்.

துரோணர் தங்களுக்கு எதிரியானாலும் பாண்டவர்கள் உண்மையாகவே அவருடைய மரணத்துக்காக அனுதாபப் பட்டனர். ‘தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்த ஆசிரியன் மறைந்துவிட்டானே’ என்ற மெய்யான சோகம் அவர்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. வீட்டுமருக்குப் பின் தங்களுக்கு வாய்த்திருந்த படைத் தலைவர் போரில் மரணமடைந்துவிட்டாரே என்ற மனத் துயரத்தோடு கெளரவர்களும் போர்க்களத்தை விட்டுத் திரும்பிச் சென்றனர். நாளைப் போருக்கு என்ன செய்து யாரைத் தலைவராக்குவது என்ற கவலை துரியோதனனைப் பிடித்துக்கொண்டது. தன் தகப்பன் திருதராட்டிரனுக்குத் துரோணருடைய மரணச் செய்தியை அறிவிப்பதற்காகச் சஞ்சயனைத் தூதனுப்பினான். ‘கண்ணனும் தருமனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து பொய் கூறித் துரோணரை வஞ்சகத்தால் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியைப் போய்த் தகப்பனாரிடம் கூறி விட்டு நாளைப் பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடு!’ என்று கூறிச்சஞ்சயனை அனுப்பினான். சஞ்சயனும் அதற்கு இணங்கி அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டான், சஞ்சயன் சென்றபின் மறுநாள் முதல் படைத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்தான் துரியோதனன். எல்லோரும் ஏகமனதாகக் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றனர். துரியோதனனுடைய அந்தரங்கமும் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றே விரும்பியது. எல்லோரும் அதையே கூறவே கர்ணனைப் படைத் தலைவனாகப் பிரகடனம் செய்தான். கர்ணனும் உள்ள நிறைவோடு அதை ஏற்றுக் கொண்டான். மறுநாள் பொழுது