பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/503

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
501
 


தங்களுடைய படைத் தளபதியாகிய துட்டத்துய்ம்மனைக் கர்ணன் தோற்று ஓடச் செய்வதைப் பார்த்தான் தருமன். உடனே அவன் வீமனை அழைத்து “நீ போய்க் கர்ணனை எதிர்த்துப் போர் செய்து அவன் கொட்டத்தை ஒடுக்கு” என்று ஏவினான். அதை நிறைவேற்றக் கருதி ஆத்திரத்தோடு கர்ணனிருந்த திசையில் பாய்ந்து சென்றான் வீமன். அவனுக்கும் கர்ணனுக்கும் பயங்கரமான வில்யுத்தம் ஆரம்பமாயிற்று. இருவர் உடம்புகளும் அம்புக் குவியலின் இடையே மறைந்து விடுமோ என்று அஞ்சும்படியாக விற்களிலிருந்து அம்புகள் பாய்ந்து கிளம்பின. வீமனுக்கு அப்போது கர்ணன் மேலே இருந்த கோபத்தில் அவனைக் கொன்று தீர்த்துவிடலாம் போலத் தோன்றியது. ஆனால் அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டான். காரணம் என்ன? தன் கையால் கர்ணனைக் கொல்லப் போவதாய்ச் சபதம் செய்திருந்தான் அர்ச்சுனன். ‘அவனுடைய அந்தச் சபதம் வீண் போய்விடக்கூடாதே, - என்று தான் கர்ணனைக் கொல்லுவதற்குத் தன் மனத்தில் எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டதோடு மட்டுமின்றிக் கர்ணனுடன் போரிடுவதையே நிறுத்திவிட்டு வேறோர் பக்கமாக விரைந்து சென்று விட்டான். போர்க்களத்தின் வேறு பல பகுதிகளில் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சாத்தகிக்கும் - விடசேனனுக்கும், சோழனுக்கும் - மகதனுக்கும், அர்ச்சுனனுக்கும் - அசுவத்தாமனுக்கும் போர்கள் நடந்தன. சாத்தகியோடு போர் புரிந்த விடசேனன் தேரையும் ஆயுதங்களையும் பறிகொடுக்க நேர்ந்தது. சோழனோடு போர் புரிந்த மகதமன்னன் மாண்டு வீழ்ந்தான். அவனுடைய மரணத்தால் பயமடைந்த கெளரவசேனை அரண்டு பின்வாங்கி ஓடியது. அர்ச்சுனனுக்குச் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய இயலாத அசுவத்தாமன் முதுகு காட்டி ஓடிவிட்டான். இப்படி துரியோதனனைச் சேர்ந்தவர்கள் ளெல்லோரும் பயந்தும் ஆற்றாமலும் தோற்று ஓடிக் கொண்டிருந்தபோது அவன் தம்பிமார்களில் ஒருவனாகிய