பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

81


அந்த அழகி சிறிதும் தயங்காமல் வீமனை நெருங்கினாள். “நீங்களெல்லாம் யார்? இந்த நள்ளிரவில் மனிதர்கள் நுழைவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் எவ்வாறு நுழைந்தீர்கள்? உங்களுக்கு இங்கு இந்நேரத்தில் என்ன வேலை?” -யாழிசை போன்ற மெல்லிய குரலில் சிறிதும் தயக்கமின்றி வீமனை நோக்கிக் கேட்டாள் அவள்.

அவளுடைய கேள்விக்கு உடனடியாக அப்போதே மறுமொழி கூறிவிடவில்லை அவன். ஆர்வம் ததும்பும் விழிகளால் அந்த இளங் கன்னிகையை ஏற இறங்க ஒரு முறை கூர்ந்து நோக்கினான். வீமனுடைய அந்தப் பார்வை அவளையும் அவள் உள்ளத்தையும் ஊடுருவியது. அந்த யுவதியின் கண் பார்வை தாழ்ந்து பிறழ்ந்தது. கன்னக் கதுப்புக்கள் சிவந்தன. கேள்வியிலிருந்த மிடுக்கு இப்போது இல்லை. தோற்றத்தில் நாணம் தென்பட்டது. மூடிய இதழ்களில் நகைக் குறிப்புப் புலப்பட்டது. இப்போது வீமன் கலகலவென்று சிரித்தான். எழுந்திருந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்று நின்று கொண்டான். அது சரி, நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? இந்தப் பயங்கரமான காட்டில் இரவு நேரத்தில் அழகே வடிவான வன தேவதை போலத் தோன்றும் உங்களுக்கு என்ன வேலையோ? மெல்லியலாராகிய தாங்கள் எவ்வளவு துன்புற்று இந்தக் காட்டிற்குள் நுழைந்தீர்களோ?” -வீமன் கேட்டான்.

அவன் சிரித்துக் கொண்டே கேட்ட இந்தக் கேள்வி அவளைத் திகைப்புக்குள்ளாக்கிவிட்டது. அவளுடைய திகைப்பில் நாணமும் கலந்திருந்தது. வீமனுடைய சிரிப்பும் பதிலுக்குப் பதிலாகக் கேட்கப்பட்ட குறும்புத்தனமான கேள்விகளும் அவள் இதயத்தைத் தழுவி இருக்க வேண்டும். அவளது வெட்கம் இந்த உண்மையை விவரித்தது. வெட்கத்தோடு வெட்கமாக அவள் தலையைக் குனிந்து கொண்டே கூறிய விடைதான் அவனைச் சிறிதளவு திடுக்கிடச் செய்தது. தான் அந்த வனத்தில் வசிக்கும் கொடிய அரக்கனாகிய இடிம்பன் என்பவனின் தங்கை என்றும்,

அ. கு. - 6