பக்கம்:மக்கட் செல்வம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

13


இதுதான் அவன் பாட்டு, அன்பின் அரசி! இதைப் படித்தாயா? ஒரு முறை இருமுறை அல்ல; பலமுறை படி. படிக்கப்படிக்கப் புதுப்புது இன்பமும் பொருளும் உள்ளத்துத் தோன்றிக்கொண்டே இருக்கும். அதன் முடிந்த முடிவு எத்துணைச் செல்வம் பெறினும், மக்கள் இன்றேல் அவர் தம் வாழ்நாள் பயனற்ற வீழ்நாட்களே யாகும் என்பதுதான். இன்று நீ நன்மகப்பேறு உற்றுச் சிறந்துள்ளாயாதலின், இனி நீ உன் வாழ்நாட்களின் பயனைக் காண் பாய் என்று கூறி வாழ்த்துகிறேன்.

செல்வி!

இப்படிப் பிள்ளைமை இன்பத்தைப் பாடிய புலவர் பலர். அவர்களின் பெயரை வரிசையாகச் சொன்னாலும் இவ்வேடு இடம் தராது. சங்ககாலப் புலவர் பலர் இக் குழந்தை இன்பத்தைப் பெற்று மகிழ்ந்ததோடு–மற்றவர்களுக்கும் காட்டியதோடு–அக்குழந்தை வளர்க்கும் நெறி காட்டி உலகுக்குப் பலப்பல உண்மைகளை உணர்த்தி உள்ளார்கள். அவற்றை இங்கே விரிக்கின் பெருகும். அதோ, உன் அருமைக் குழந்தை உன்னை அழைக்கிறது. அதன் முகம் காண உன் உள்ளம் விழைகிறது. எனவே மேலும் இக்கடிதத்தை நீட்ட நான் விரும்பவில்லை. அடுத்த கடிதங்களில் ஔவையும் பிறரும் குழந்தை பற்றிக் கூறிய கருத்துக்களை எழுதுகிறேன். தொடர்ந்து பிற புலவர் தம் வாய்மொழிகளையும் நீ காண்பாய். நன்மக்கட்பேறு நனி சிறக்க எனக்கூறி இன்று இத்துடன் அமைகின்றேன்.

அன்புள்ள,
அப்பா