பக்கம்:மக்கட் செல்வம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குழவி கொள்பவரின்


உழைக்கும் நிலையில், பெற்ற பெண் வேறு என்ன செய்ய முடியும் என்று நீ எண்ணுவது எனக்குப் புரிகிறது. எனினும் அத் தாய் வீட்டில் இருக்கும்போது குழந்தையைப் போற்றி வளர்க்கத் தவற மாட்டாள் என்பது பெரும் பாலும் நாம் காண்பதுதான். என்றாலும் இதை நான் குறிக்கவில்லை. சில செல்வர் வீட்டுப் பெண்கள் தங்கள் அழகும் நாகரிக வெளிப்பகட்டும் குழந்தைக்குப் பால் கொடுப்பதால் குறைபடும் என்பதற்காகவே வளர்க்கும் வழக்கத்தைக் கைவிடுகிறார்கள். அவர்களைப் பற்றித் தான் நான் மேலே குறிப்பிட்டேன். நிற்க, பழங்கால இலக்கியங்களில் நற்றாய், செவிலித்தாய் என இரு தாயார் இருப்பதாகக் காண்கிறோமே என்று நீ கேட்கலாம். ஆனால் அதில் வரும் செவிலித்தாய் இப்போது இருப்பவர்போன்று கூலிக்கு வளர்ப்பவளல்லள். பெற்ற தாயை மறக்கவைப்பவளுமல்லள், அவள் நற்றாயோடு உடன் வளர்ந்து உற்ற தொடர்பு கொண்டவள். தாய் சீராட்டிப் பாலூட்டி வளர்த்த பிறகு அக்குழந்தையை மணப் பருவம்வரையில் வளர்ப்பவளாவள். எனவே செவிலி எந்த வகையிலும் இன்றைய ‘கூலி’ வளர்ப்பாளருக்கு ஒப்பாக மாட்டாள். இவையெல்லாம் பொது விதியாக நான்குறிப்பிடவில்லை என்பதை நீ அறிந்து கொள். எங்கோ ஒருசிலர் அறியாமையால் நாகரிகம் என்றபேரில் செய்யும் கொடுமைகளைத்தான் குறிக்தேன். இளங்குழந்தையை வளர்ப்பதில் தான் எத்தனையோ இன்னல்கள் உள என்பதை நீ அறிந்துகொண்டு பக்குவமாக உன் குழந்தையை வளர்க்க முயலவேண்டும். இன்று குழந்தை வளர்ப்பைப்பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நூல்கள் வந்துள்ளன. மற்றும் உன் பக்கத்திலுள்ள குழந்தைகளைப் பெற்று வளர்த்து வாழும் பெரியவர்களும் உனக்கு வழிகாட்டுவார்கள். நான் இரண்டொன்றைத்தான் காட்ட முடியும்.