பக்கம்:மக்கட் செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குழவி கொள்பவரின்


நீக்க வேண்டும். சில குறைகளை அவர்கள் காட்டியும் வாய் திறந்தும் கூற முடியாதிருக்கலாம். ஆனால் அவற்றை நாடி அறிந்து அக்குறை களைய முற்பட வேண்டும். அக்குடிகள் வாடத் தான் வாழுதல் அரச நெறிக்கு- அமைச்சு நெறிக்கு-ஆட்சி நெறிக்கு மாறுபட்டது. சுருங்கக் கூறின் மேலே நான் உனக்குக் காட்டிய வழியில் பெற்ற குழவியைத் தாய் தழுவி ஓம்பி அல்லல் வராது ஆதரித்துக் காக்கும் வழியில்-நாடாளும் நல்லவர்கள் தம் நாட்டை நன்கு காக்கவேண்டும்.

அவ்வாறு காக்கும் உள்ளத்து அருளும் அன்பும் நிலைபெற்றிருக்கும். அல்லா உள்ளத்தோ வன்பும் வன்கணும் குடிகொள்ளும். எனவே அரசன் வன்புடையார் போன்று மக்களை வாட்டாது, அன்புகொண்டு ‘குழவியைத் தாய் வளர்ப்பது போன்று’ நாட்டைக் காக்க வேண்டுமென்கின்றார் அப்புலவர். ஆம்! புலவர் எளிமையாகச் சொல்லிவிட்டார். நானும் உனக்கு எளிமையில் எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதி விடலாம். ஆனால் அதை நீ செயலில் மேற்கொள்ளும் போதல்லவா அதன் அருமைநிலை உனக்குத் தெரியும். இதையே தான் அந்தப் புலவரும் சொல்லிய உடன் எண்ணிப்பார்க்கிறார். குழந்தை வளர்ப்பது எளிதன்று. அது செய்தற்கரிய ஒரு சிறப்பு என உணர்த்துகின்றது அவர் உள்ளம். அத்தகைய சிந்தனை உடைய புலவர் யார் என்று நீ அறிய விரும்புகிறா யல்லவா? உன் போன்ற மக்களைப் பெற்று அவர்களை வளர்க்கும் அருமை அறிந்த அப்புலவரை உனக்கு இதோ அறிமுகப் படுத்தி விடுகிறேன். அவர் பெயர் நரிவெரூத் தலையார் என்பது. அவர் சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட்கோ பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனைப் புற நானூற்று ஐந்தாம் பாடலால் பாராட்டி வாழ்த்துகின்றார். அதிலேதான் அவன் நாடு காக்கவேண்டிய பண்பை