பக்கம்:மக்கட் செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. புதல்வர் தம் மழலை



அன்புடைச் செல்வி மங்கையர்க்கரசிக்கு,

எனது முன்னைய கடிதங்களைப்பற்றி நீ எழுதிய குறிப்பை அறிந்தேன். குழந்தை வளர வளரத்தான் அதனுடைய இன்பம் மெல்லமெல்லப் புலனாகும். இளங் குழந்தை எப்போதும் அழுது கொண்டிருக்கிறது எனக் கடிதம் எழுதியுள்ளாய், இளங்குழந்தைகள் அழாது வேறு என்ன செய்யும்? வேண்டியதை அறிந்து வாய் திறந்து கேட்க முடியுமா? பேச முடியுமா? பேசினால் தான் புரியுமா? அதன் அழுகைக் குறிப்பறிந்து நாம் தாம் அதற்கு வேண்டியதைக் காலம் அறிந்து தருதல் வேண்டும். குழந்தைகள் அழாது இருந்தாலும் அழாத ‘மக்கு’ப்பிள்ளை என்பார்கள். அதிகமாக அழுதாலும் தொல்லை கருதிக் குறைபடுவார்கள். என்றாலும் அழாதிருப்பதைக் காட்டிலும் அதிகமாக அழுதலே நல்லது. எனவே நீ குழந்தை அழுவதைப் பொருட்படுத்தாது அதற்கு வேண்டிய வகையில் வேண்டிய பால் அளித்துப் பாதுகாப்பாய் என நம்புகிறேன்.