பக்கம்:மக்கட் செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதல்வர் தம் மழலை

23


குழந்தை வாய்திறந்து பேச ஆரம்பித்தாலும் உடனே அதைப்புரிந்து கொள்வது அவ்வளவு எளிது அன்று. குழந்தை மொழியே தனியானது. என்றாலும் இன்று மொழி நூல் ஆராய்ச்சி செய்கின்ற உலகப் பெரும் பேராசிரியர்களெல்லாம் இக்குழந்தை மொழியைக் கொண்டே மொழிவரலாற்றை ஆராய முற்படுகின்றனர். எனவே புரியாத மொழி பேசும் குழந்தை உலகுக்குத் தன் வாய்ச் சொல்வழி பல உண்மைகளை உணர வைக்கின்றது. அக்குழந்தை வாய்திறந்து மெள்ள மெள்ளப் பேசும் அசைவுச் சொற்களையும் அவற்றின் சிதைவுகளையும் காண்கின்ற ஆசிரியர் ஒருவர் அக் குழந்தை முதலில் தன் உறவினர்களுள் முக்கியமான வரை அறிந்து விளித்தே பிறகு மற்றவரை விளக்கிறது என்பர். ‘தாத்தா’, ‘ஆயா’ ‘அம்மா’, ‘ஆத்தாள்’ போன்ற சொற்களே முதலில் குழந்தைகள் வாயில் சுலபமாகவரும் சொற்கள் என எடுத்துக் காட்டுவர் அவர்; பிறகு பிற உறவின்முறைச் சொற்களாகிய அத்தை, அக்கா, அண்ணன், மாமா போன்ற சொற்கள் வரும் என்பர். இதை அப்படியே சரி என்று நாம் கொள்ளாவிட்டாலும் குழந்தை தாய் முதலியவர்களை மற்றவர் சொல்லிக்காட்டாமலேயே ‘அம்மா’ போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பதைக் காண்கிறோமல்லவா? உன் குழந்தை பேசத் தொடங்கியதும்வாய் திறந்து உன்னை ‘அம்மா’ என்று அழைக்கத் தொடங்கியதும் – அவ்வின்பம் உனக்கு நன்கு புரியும். அதை எழுதிக் காட்டமுடியாது. எனினும் பெரியோர் கூறிய இரண்டொன்றை உனக்கு இன்று எழுதி அனுப்புகிறேன்.

‘மக்கள் பேறு’ பற்றி வள்ளுவர் கூறியிருப்பதை, முன்னமே காட்டியுள்ளேன். அவர் குழந்தையின் வாய்ச்சொல் பற்றிக் கூறியிருப்பதை இங்கு நினைத்துப் பார்