பக்கம்:மக்கட் செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலை

27


‘யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா வாயினும், தந்தையர்க்கு
அருள வந்தனவால் புதல்வர் தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி நீ அருளன் மாறே’ (புறம் 92)

இதில் அதிகமானை நோக்கிப் பாடுவதால், அவன் தந்தை நிலையில் உள்ளமையின் ‘தந்தையர்க்கு’ என்றார். உன்போன்ற தாயர்க்கும் இது பொருந்துவதாகும்.

அன்புடைச் செல்வி!

வெண்பாப் பாடுவதில் வல்லவர் புகழேந்திப்புலவர் என்பதை நீ அறிவார். நளனுடைய கதையை அழகுத் தமிழில் வடித்துத்தந்த அப்புலவரை ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்றே பாராட்டுவர் புலவர். குழந்தை நலத்தை அவர் சிறக்கப் பாராட்டுகிறார், அதிலும் அவர் தம் வாய்மொழிபற்றி அவர் காட்டும் சிறப்பு போற்றற்குரியது. உலகில் எத்தனையோபேர் செல்வச் செருக்காலும் கல்விமுதலியன பெற்ற தருக்காலும் தம்மை மறந்து இறுமாக்கின்றனர். அவர்தம் இறுமாப்பு யாவும், அவர் மக்களைப் பெறாதவராயின் இரக்கத் துக்கு உரியனவே என்பது புலவர் முடிவு. அக் குதலை வாய் மக்களைத்தான் அவர் எத்தனை அடைமொழி கொடுத்து விளக்குகின்றார்.

இளங்குழந்தைகள் கிண்கிணி அணிந்து தளர் நடை இடுவார்கள், இவர் தம் தளர்நடை பற்றி உனக்குப் பின்னொரு கடிதத்தில் விளக்கி எழுதுகிறேன். இங்கே புகழேந்தியின் பாடலை மட்டும் காட்டி முடிக்கின்றேன்.