பக்கம்:மக்கட் செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுவர்ப் பயந்த செம்மலோர்

45



பிறந்தாள் மகனை உரிமை பெற்றபின் ஒழுங்காக நடவாத காரணத்தால் அவ்வுடன் பிறந்தாள் உளம் வருந்திக் கூறிய அடிகள் தாம் அவை.

'பெருமிதம் உமக்கேன் பிள்ளைப்
பேறற்ற பாவி
நீ என்
அருமை நன் மகனாலன்றோ

இருமையும் அடைவாய்'

என்று பரஞ்சோதியார் மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் பிள்ளைப் பேறு பெறாதவர் இம்மை மறுமை இருஉலகிலும் நலம் பெறமுடியாது என்ற உண்மையை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டுகின்றார். எனவே மக்கள் தம்மைப் பயந்தோர்க்கு இம்மையில் இன்பம் தருவதோடு மறுமையிலும் வாழ வைக்கும் சிறப்பினைப் பெற்றவர் என்பது தெளிவாகிறதன்றோ! வடமொழியிலும் இக்கருத்தை வலியுறுத்துவதே புத்திரன், புத்திரி என்ற மக்கட் செல்வத்தைக் குறிக்கும் பெயர்கள் என்று சொல்லுவார்கள். மறுமையில் உண்டாகும் 'புத்'தென்னும் நகரத்தில் இருந்து பெற்றோரை மீட்பவனே புத்திரன் என்றும், அவ்வாறு பெற்றோரை மீட்பவளே புத்திரி என்றும் கூறுவர். இவற்றாலெல்லாம் நாம் அறிவது குழவிச் செல்வம். இம்மைக்கு மட்டுமன்றி மறு மைக்கும் பலன் தரும் செல்வம் என்பதேயாகும்.

இன்னும் இம்மக்கட் செல்வத்தைப் பற்றி எத்தனையோ புலவர்கள் பாராட்டிப் போற்றி உள்ளனர் என்பதை ஓரளவு நீ அறிவாய் என எண்ணுகின்றேன். பெரிய இலக்கியம் பாடும் புலவர்களெல்லாம் இப்பிள்ளைச் செல்வத்தைப் பாடாதிரார். திருவள்ளுவர் குறட்பாக்களைப் பல முறை நீ படித்திருக்கிறாய். என் கடிதங்களிலும் அக்குறள்களை எடுத்துக் காட்டி இருக்கிறேன். பாரதத்தில் இக்குழந்தை இன்பத்தை குறிக்கும் ஒரு பாடல் நல்ல கருத்தமைந்த பாடலாக உள்ளது.