பக்கம்:மக்கட் செல்வம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம்மக்கள்

55


துணைப் பொருத்தமில்லாதது என்பதை எண்ணிப்பார். தன் மகன் பெற்ற புகழைத் தானேநேரில் கண்டு மகிழ்வதினும் அறிவறிந்த மேலோர் வாய்வழிக்கேட்டு மகிழ்வதில் தானே உண்மையில் இன்பம் இருக்கிறது. இதற்குள் இந்த இன்பத்தை நீயே உணர்ந்திருப்பாய் அல்லவா! சிறு குழந்தை கால் உதைத்து வாய்திறந்து சிரிப்பதை நீயே கண்டு மகிழ்வாய். அதன் பொலிவை மற்றவர் கண்டு அதைப் போற்றும் போது உன் மகிழ்ச்சி மிக அதிமாகின்றதல்லவா! இப்பிள்ளைமை விளையாட்டிலேயே இப்பெரு மகிழ்வு இருக்கும்போது, தம் மக்கள் அறிவும் திருவும் செம்மையும் சிறப்பும் பெற்றுள்ளதை மற்ற அறிவறிந்த மக்கள் புகழ்வதைக் கேட்கத் தாயர் உண்மையின் பெரிதும் மகிழ்வார்களன்றோ! ஆம்! இந்த உண்மையை நன்கு அறிந்துவைத்தும் கூடப் பரிமேலழகர் காலச்சுழலில் பட்டமையால் பெண்களைத் தாழ்ந்தவராகவே கூறிவிட்டார். அது பற்றி நான் இங்கே விளக்கத் தேவை இல்லை என நினைக்கிறேன். காலம் அவருக்கு விடை கண்டுவிட்டது. இன்று சிற்சில துறைகளில் அறிவு நிலையங்களில் -ஆண்களினும் பெண்கள் விஞ்சி இருப்பதைக் காண்கிறோமல்லமோ! ஒருவேளை பரிமேலழகர் இன்று உலகிற்கு - சிறப்பாகத் தமிழ் நாட்டுக்கு - வர முடிந்து, வந்து பார்ப்பாரானால் தாம் செய்த இமயம் போன்ற தவறு எண்ணி எண்ணி உளம் நைவார்... நிற்க,

அரசி,

வள்ளுவர் இம்மக்கட் செல்வம் பற்றிக் கூறியதையே உனக்குக் காட்ட விழைகின்றேன். அவர்தம் பத்துக் குறள்களிலும் தனித்தனி மக்கட் செல்வச் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். முதற் குறளிலேயே அவர் உலகில் பெறக்கடவதாகிய பேறுகளுள் மக்கட் பேற்றினும் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதைத் திட்டமாகக் காட்டுகின்றார்.