பக்கம்:மக்கட் செல்வம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தம்பொருள் என்ப தம் மக்கள்



'பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற'

என்பது அவர் வாக்கு, ஆம்! உலகில் மனிதன் எத்தனையோ செல்வங்களைப் பெற நினைக்கிறான். நினைத்து அவற்றைத் தேடுகிறான். எதிலும் அவன் மனம் நிறைவு பெற்றான் என்று சொல்ல முடியுமா? அப்படியே பெற்றாலும் அவை எத்தனை நாள் இருக்கும்? மக்கட் செல்வம் தான் உள்ள வரை போற்றப்படுவதோடு என்றென்றும் பெற்றவரையும் பின்வரும் கான்முளைகளையும் வாழவைப்பதன்றோ! இது பற்றி முன் ஒரு கடிதத்திலேயே உனக்கு விளக்கமாகக் காட்டியிருக்கிறேன்.

இத்தகைய மக்களைப் பெறுவதால் பயன் என்ன என்று கேட்கலாம் அல்லவா? அதற்குத்தான் அடுத்த குறளிலேயே வள்ளுவர் பதில் தருகின்றார். மக்கட் பிறவியின் பயன் இந்தப் பிறப்பிலே மட்டும் முடிந்து விடுவதன்று. தொடர்ந்து வரும் பிறவிகளெல்லாம் தீமையற்ற நல்ல வாழ்வு வாழச்செய்வது, தம் பொருளாகிய இம் மக்கட் பிறவி எடுத்ததன் பயனே எனத் தெளிவுபடக் கூறுகின்றார்.

'எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்'

என்பது நீ அறிந்த ஒன்று தான்.

அடுத்துவரும் குறளில் தான் அவன் மக்களைத் தம் பொருள் என்றே காட்டுகின்றார். 'தம் பொருள் என்ப தம் மக்கள்' என்ற அடியைப் படிக்கும்போது மக்களைப் பெற்றவர் தாம் எத்துணை மகிழ்ச்சி அடைவார்கள். இதைக் கூறிய திருவள்ளுவர் அடுத்த 'அவர் பொருள் தம்தம் வினையான் வரும்' என்றும் கூறுகின்றார். இதற்குப் பலவகையில் பொருள் கூறுவார்கள். அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே