பக்கம்:மக்கட் செல்வம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தம்பொருள் என்ப


‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்’ என்றும்

‘மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்றும்

‘குழலினிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்’ என்றும்

வள்ளுவர் வாய்மொழி அமைகின்றது. அடுத்த நான்கு குறள்களிலும் வள்ளுவர் பிள்ளை பெரியவனான பின் பெறவேண்டிய சிறப்புப்களையும், அத்துறை வழிப்பெற்றோர் ஆற்றவேண்டிய கடமைகளையும், அவ்வாறு சிறக்க மேலோக்கிவரும் மக்கள் நலம் கண்ட வெற்றி பற்றிய பெருமைகளையும், தம்மை முன்னுக்குக் கொண்டு வந்த பெற்றோருக்கு மக்கள் ஆற்றவேண்டிய கடமையையும் எடுத்துக்காட்டுகின்றார். அவையெல்லாம் இங்கு உனக்கு எடுத்துச்சொல்லத் தேவை இல்லை என என்று நினைக்கிறேன். உன் குழந்தை வளர வளர அறிவு பெறப் பெற நீ அதற்கு ஆற்றவேண்டிய கடமை பற்றியும் வளர்ந்த குழந்தை உனக்கு அளிக்கும் பெருமையற்றியும் - நீயே அறிந்து கொள்வாய். இந்தக் கடிதத்தில் இளம் குழந்தை-உனது செல்வத்துட் செல்வமாகிய இக்குழந்தை-எந்தெந்த வகையில், உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது பற்றியும், அந்த இன்பத்தையெல்லாம் வள்ளுவர் பெருந்தகை எவ்வெவ்வாறு பாடிப் பாராட்டி உள்ளார் என்பது பற்றியுமே காட்ட விரும்பினேன் இவ்வளவு போதும் என நினைக்கின்றேன்.

கடைசியாகக் காட்டிய மூன்று குறட்பாக்களையும் நீ நன்கு துய்ப்பாய் என்பதில் ஐயமில்லை, இந்தக் கருத்தையெல்லாம் பாராட்டிப் பலப்பல புலவர்கள் பாடியுள்ளனர். முதலிலே சங்ககாலப் புலவர் ஒருவர் பாடிய பாட்டினை எனது கடிதத்தில் விளக்கியிருந்தேன். அது