பக்கம்:மக்கட் செல்வம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வமும்

65


கோசலை ஆகிவிட்ட உணர்விலே திருப்புகழ் பாடல் உருப்பெறுகின்றது.

‘எந்தை வருக! ரகுநாயக வருக!
மைந்த வருக ! மகனே இனிவருக !
என்கண் வருக! என தாருயிர் வருக — அபிராமா

இங்கு வருக ! அரசே வருக! முலை
உண்க வருக! மலர் சூடிட வருக!
என்று பரிவினொடு கோசலை புகல — வாருமாயன்

சிந்தை மகிழும் மருகா’

என அவர் முருகனைத் எண்ணி இராமனை முன் நிறுத்திப் பாடும்போது அப்படி இராமன் நம் கண்முன் வருவது போன்ற காட்சியை நாம் பெறுகின்றோ மல்லமோ!

திருமாலைப் பாடவந்த அடியார்களுள் குலசேகரர் என் உள்ளத்தைத் தொட்டவர் என்பது. உனக்குத் தெரியுமல்லவா? அவருக்கு என் உள்ளத்தில் இடம் கொடுத்ததற்கு முக்கிய காரணம் அவர் ஆண்டவனைக் குழந்தையாக்கிக் கொண்டாடிய சிறப்பேயாகும். இராமனையும், கண்ணனையும் குழந்தையாக்கித் தன்னைக் கோசலையாகவும், தேவகியாகவும் கொண்டு பாடுகின்ற பாடல்கள் உள்ளத்தைத் தொடுவன வல்லவோ!

அசுரர் உரம் தொலைத்த இராகவனைக் குழந்தையாக்கி, அவன் கோசலைக்கு மகனாகப் பிறந்ததைப் பாராட்டிப் பெருமான் பாடும் போது நாம் நம்மை மறக்கிறோம். பெற்றவளே கூட அந்த வகையில் தாலாட்டி இருப்பாளா என நாம் ஐயம் கொள்ளத் தக்க வகையில் அவர் தம் உள்ளம் கலந்த பாடல்கள் நம்மை மறக்கச் செய்கின்றன. பதினொரு பாடல்கள் அப்பகுதியில் உள்ளன. ஒன்றை மட்டும் உனக்குக் காட்டினால் போதும் என நினைக்கிறேன்.