பக்கம்:மக்கட் செல்வம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுண்ணும் பசுங்குழவி

69



பெற்ற குழந்தைக்குப் பால் ஊட்டலும்கூடத் தவறு எனக் கருதும் உலகில்தான் நாம் வாழ்கின்றோம். இது பற்றி முன்னொரு கடிதத்தில்கூட நான் குறித்திருக்கிறேன். ஆயினும் இந்தக் குலசேகரர் பாடலைப் படித்த பின் அதுபற்றி உனக்கு எழுதவேண்டும் என்று தோன்றிற்று.

பிள்ளே பிறக்கவில்லையே என்று எத்தனையோ பேர் தவம் இருக்கும் நிலையும், காசி, இராமேச்வரம் சென்று வரும் நிலையும் நாட்டில் இன்னும் காண்பனவே. ஆனல் அதே வேளையில் கருத்தடை செய்யவேண்டும் என்ற பிரசாரமும் அதற்காக அரசாங்கத்தாரே முன்னின்று நடத்தும்பல மருந்தகங்களும் நாம் கண்முன் தோன்றுகின்றன. மக்களினம் பெருத்துவிட்டால் அவர்களுக்கு வாழ்வளிக்க முடியாதே என்ற காரணத்தால் இக் கொடுமை நடைபெறுகின்றது. நாளிதழ்களில் அன்றாடம் வரும் செய்திகளைப் பார்த்தால் இதுவும் சரிதானே என எண்ண வேண்டியிருக்கிறது. நேற்றுக்கூட (17-2-60) குழந்தையைக் கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட செய்தியும், தனிஒருத்தி வறுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் பத்திரிகைகளில் நீ படித்திருப்பாய். இத்தகைய செய்திகளைக் கண்டால் அரசாங்கம் இவ்வாறு செய்வது சரிஎனத் தான் தோன்றும். எனினும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தால் நாட்டில் உணவுப்பொருள் இல்லாத காரணத்தால் இந்த நிலை ஏற்படவில்லை. இருந்தும் சரியாக மக்கள் பங்கிட்டுக்கொள்ள விரும்பாத தாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. எனவே அரசாங்கம் நோய்முதல் நாடி உணவுப்பொருளை அனைவருக்கும் சரியாகப் பங்கிட்டுக் கொடுக்கவும், எல்லோருக்கும் உழைத்துச் சம்பாதிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்கவும் முயன்ருல் இக்கொடுமைகள் நிகழா. எங்கோ செனறுவிட்டேன்!