பக்கம்:மக்கட் செல்வம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பசுங்குழவி

71


அடியில் உள்ள இருளை நீக்காது போவது நாம் காண்பது தானே. மறுபடியும் இன்று எங்கெங்கோ செல்கிறேன்.

பெற்ற குழந்தைக்குப் பால் ஊட்டுவது அநாகரிகம் என்று நன்கு படித்த பெண்களும் செல்வர் வீட்டுப் பெண்களும் இருக்க, ஏழைகளும் கிராமத்தில் வாழ்வோம் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் அந்த இன்பத்தை இழவாமல் பாதுகாத்துத்தான் வருகிறார்கள். தேவகி அத்தகைய பெண்களுள் ஒருத்தி. குழந்தையைப் பெற்றவர்கள் குழந்தைக்காக இல்லாவிட்டாலும் இக்குழந்தைக்குப் பாலூட்டுவதில் தாம் பெறும் இன்பத்திற்காகவது ஊட்டலை மறுக்க இயலாது. சில நலிவுள்ளவர்கள் பால் இல்லை என்ற காரணத்தால் வேறு பால்களை நாடுவது இயல்பு. ஆனால் உண்ண உண்ணச் சுரக்கும் உடல் வளம் பெற்றவர்களும் புறநாகரிக வாழ்வுக்காகப் பிள்ளைமையின் கொள்ளை இன்பத்தைத் துறப்பார்களானால் அவர்களை என்னென்பது? எப்படியோ அப்படிப்பட்ட பெண்களால்தான் இன்றைய நாகரிக உலகில் விரைந்து முன்னேற முடிகின்றது. இது காலத்தின் கோலம் போலும்.

கண்ணன் தேவகியின் மைந்தனாகப் பிறந்தவன். ஆனால் அவளிடம் வளரவில்லை. நந்தகோபன் மனைவியாகிய யசோதையின் செல்வமகனாக வளர்ந்தான். அவன் தன் மடியில் இருந்து எப்படி எப்படிப் பால் உண்பான் என்பதை எண்ணிப் பார்க்கிறது தேவகியின் உள்ளம். கண்ணன் பால் உண்பதாகப் பல வண்ணப் படங்கள் கூட நாட்டில் உலவுவதை நீ கண்டிருப்பாய். ஆம்! அந்ததோற்றம் தேவகியின் உள்ளத்தில் உருப்பெற்றது. என்றாலும் அந்த இன்பத்தைத் தான் பெறவில்லையே என்றபோது உள்ளம் தடுமாறிற்று. உதடு அசைந்தது; வாய் பாடிற்று. இதோ அந்தப் பாடல்.