பக்கம்:மக்கட் செல்வம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. பிள்ளைத் தமிழ்



அன்புள்ள அரசி,

முன் ஒரு கடிதத்தில் ‘குழந்தையும் தெய்வமும்’ என்பது பற்றி எழுதினேன் அல்லவா? ஆம். அவை இரண்டும் ஒரே தன்மை உடையன; அன்பால் விரும்பி அழைப்பவரை விரைந்து பற்றிக் கொள்வன என்று கண்டாய் அல்லவா? அந்த அடிப்படையிலேயே ஆண்டவன் அடியவரில் சிலர் அந்த ஆண்டவனையே குழந்தையாக எண்ணிப் போற்றி வழிபட்டிருக்கின்றனர். கண்ணனையும், இராமனையும் குழந்தையாகக் கண்ட குலசேகரருடைய பாடலை நீ முன் படித்தாயல்லவா? அது பிள்ளைத் தமிழுக்கு முன் வழிகாட்டிய பாடல். ஆனால் குலசேகரருக்குப் பின்னால் பல அடியவர்கள் கடவுளரைப் பிள்ளைகளாகவே எண்ணி எண்ணிப் போற்றி வழிபட்டுள்ளனர். தமிழில் உள்ள தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களில் பிள்ளைத் தமிழ் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.