பக்கம்:மக்கட் செல்வம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத் தமிழ்

75


பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் உளங்குளிர்ந்து பாடும் அடியவர்கள் தாம் தாம் வழிபடு கடவுளரை எத்தனை எத்தனை வகையாகப் போற்றுகிறார்கள் தெரியுமா? உண்மையிலேயே குழந்தைகளைப் பெற்ற தாயார்கூட அத்துணை அளவில் சிறப்பாகப் போற்றமாட்டார்கள். அடியவர் தாம் வழிபடும் தெய்வத்தைக் குழந்தையாக்கி, அந்தக் குழந்தை எப்படி எப்படி மெள்ள மெள்ள வளரு கிறதோ அதற்கு ஏற்ற பருவங்களை அமைத்து, அந்தந்தப் பருவத்தில் காணும் பிள்ளைமை விளையாட்டையெல்லாம் எழுத்தோவியத்தில் படம் பிடித்துக்காட்டும் சிறப்பைக் கற்றவர்கள் தாம் அறிவர். நீயும் சில பிள்ளைத் தமிழ்ப் பாடல்களைக் கல்லூரி வகுப்புக்களிலும் பள்ளி வகுப்புக்களிலும் பயின்று இருப்பாய் அல்லவா?

கடவுளரில் பலரைப் பிள்ளைகளாகப் பாராட்டுவர். எனினும் சிவனுக்குப் பிள்ளைத் தமிழ் காணோம். சிறப்பாக முருகனுக்குத்தான் அதிகமான பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. அம்மைக்கும் சில உள. இப்பிள்ளைத் தமிழ்ப் பாடல்களை வைத்துப் பின் வந்தவர்கள் இலக்கணங்களைப் பாட்டியலில் உண்டாக்கி விட்டார்கள். பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் இவை என்றும், அவ்வக் காலத்தில் பிள்ளை எவ்வெவ்வாறு வளர்ச்சி அடையும் என்றும், அவ்வப்போது அப்பிள்ளையின் நிலை எவ்வெவ் வாறு இருக்கும் என்றும் அதை எப்படிப் பாடிக் கொண்டாட வேண்டும் என்றும் பலவாறு இலக்கணங்களை எழுதி இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் இங்கே உனக்கு நான் எழுதப்போவதில்லை. அவை தேவையற்றவையும்கூட. என்றாலும் அந்தப் பிள்ளைமை விளையாட்டை எல்லாம் அடியவர்கள் பாடிப்பாடி உளமுருகி நிற்பதை நீ நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும்.