பக்கம்:மக்கட் செல்வம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பிள்ளைத்


அன்பின் அரசி!

குழந்தையைப் பாடவந்த புலவர்கள் முதலில் ‘காப்பு பருவம்’ என அமைத்துள்ளனர். தாம் பெற்ற குழந்தையைக் காக்க விரும்பும் தாயார் காப்பிடுவதை நீ காண்பாய். இளங்குழந்தைகளுக்கு நோய்வரின், அந்த நோய் நீங்க வேண்டுமென்று பெற்றவர்கள் இறைவனை நினைத்து மஞ்சள் துணியில் ‘காசும் நெல்லும்’ கலந்து முடிந்து அந்தக் குழந்தைகளின் கைகளில் ‘கடவுள் காக்க’ என்று சொல்லிக் காப்பாகக் கட்டுவதை நீ அறிவாய் அல்லவா! ஆம்! அந்தக் காப்புத்தான் பின்னால் பொன், வெள்ளிக் காப்புக்களாக உருவெடுத்தது. அதுபற்றிய ஆராய்ச்சி உனக்கு வேண்டாம். அடியவர் அந்தக் காப்புப் பருவத்தில் தாம் தாம் வழிபடும் கடவுளைக் குழந்தையாக்கி அக்குழந்தையைக் காக்க வேண்டுமென வேறு தெய்வங்களை வேண்டுவது முறை என்பதை நீ அறிந்தால் போதும்.

அடுத்து அவர்கள் தாலப்பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம் என்று பருவங்களைக் குழந்தை வளர வளர வளர்த்துக்கொண்டே செல்வர். அவற்றுள் இரண்டொன்று உனக்கு இதற்குள் அனுபவமாகியிருக்கும். குழந்தையைத் தொட்டில் இட்டுத் தாலாட்டுவது நீ அறிந்த ஒன்றல்லவா! ஆம்! அதை அடியவர்கள் எத்தனை எத்தனை அருமையாகப் பாடுகிறார்கள் தெரியுமா ? வீட்டில் குழந்தையைத் தாலாட்டும் பெண்கள் கூட அவற்றில் பத்தில் ஒரு பங்கு பொருந்தப் பாடுவார்களா என்பது ஐயமே! ஏன்? நீயே உன் குழந்தையை அப்படி எல்லாம் தாலாட்டி இருக்கிறாயா என்பதை எண்ணிப்பார். நிச்சயம் பாடி இருக்கமாட்டாய். இதோ ஒரு பாடலை எடுத்துக் காட்டுகிறேன்.