பக்கம்:மக்கட் செல்வம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்

77


குமரகுருபரர் முருகனிடத்து இடையறாத ஈடுபாடு உடையவர்; அவனை எண்ணி எண்ணிப் பாடுபவர்; புள்ளிருக்கும் வேளூர்க் குமரனைக் குழந்தையாகக் கண்டு போற்றியவர், அக்குழந்தைத் தாலாட்டில் அவனுடைய பலப்பல பெருமைகளைக் கூறித் தாலாட்டும் திறம் வியக் கற்பாலது, இதோ அவர் பாட்டு; நீயே படித்துச் சுவைத்துப்பார்.

ஊனாய் உயிர்க்குயிரானாய் தாலோ தாலேலோ
       ஓதாது உணர்த்திடு போதா தாலோ தாலேலோ
ஆனா அருட்கு அனுபானா தாலோ தாலேலோ
       ஆயாத சொற்சொல் உபாயா தாலோ தாலேலோ
நானாய் எனக்கரிதானாய் தாலோ தாலேலோ
       நாததிகட்டு அனுபூதா தாலோ தாலேலோ
தேனார் பொழிற் குருகூரா தாலோ தாலேலோ
       சேனாபதிப் பெருமாளே தாலோ தாலேலோ

(முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ்)

என்ன எண்ணுகிறாய்? இப்படி நீ உன் குழந்தையைக் கூட இதுவரை தாலாட்டவில்லையே என்று தானே. ஆம்! நான் முன்சொன்னபடி, நீ மட்டுமன்று; உலகில் எல்லாத் தாயாருமே இத்தனை அருமையாகத் தாலாட்டி இருக்க மாட்டார்கள். அடியவர் அன்புவழிப் பெருக்கெடுத்து ஓடிவரும் இன்பப் பாடல்களே தனிநலம் வாய்ந்தவை.

இதுபோன்றே செங்கிரை, முத்தம், வருகை முதலிய பருவங்கள் அமைகின்றன. அவற்றின் சிறப்பை யெல்லாம் உன் குழந்தை இனிதான் உனக்குக் காட்டும். என்றாலும் இங்கு அடியவருக்கு ஆண்டவன் காட்டிய அந்த அழகுக் காட்சிகளையெல்லாம் தொடர்ந்து காட்டியே இக்கடிதத்தை முடிக்கலாம் என்று கருதுகின்றேன். கடிதம் சற்று நீளும் தான். எனினும் அன்புடைய மெய் அடியவர் பாடல்கள் இடையிடை வருவதால் நீ சுவைத்துப் பயிலலாம் என எண்ணுகின்றேன்.