பக்கம்:மக்கட் செல்வம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பாரதியும்


குழந்தைகள் முகத்தையும் அவற்றின் சிரிப்பையும் கண்டால் மகிழ்ச்சி பிறப்பது இயல்புதானே. அந்தப் பிள்ளைகளால் வாழ்வே ஏற்றம் பெறுமல்லவா! இவற்றை யெல்லாம் எண்ணிய பாரதியார்

‘சின்னஞ் சிறு கிளியே—கண்ணம்மா
       செல்வக் கவஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே—உலகில்

        ஏற்றம் புரிய வந்தாய்’

என்று அழகாகக் கொஞ்சும் இனிய எளிய தமிழில் எடுத்துக்காட்டிவிட்டார். அவர் அத்துடன் அக்குழந்தையையே கனியாகவும், அமுதாகவும், பொற்பாவை யாகவும்–ஆம்–பேசும் பொற்பாவையாகவும், தேனாகவும் பலவகையில் சிறப்பிக்கின்றார். ஆம். கனி, அமுது, தேன், இவைகள் வாய்க்கு இனிமையாக இருப்பன மட்டுமல்லாது வாழ்வையே நோயற்றதாக்கி வளமுறச் செய்கின்றன அல்லவோ! அதுபோன்றே குழந்தை இன்பமும் அப்போதைக்கு இனிமை - தருவது மட்டுமல்லாது நம்வாழ்வையே வளமாக்கி என்றென்றும் சிறக்க வைக்கும் என்பதை நீ கண்டு உணரவேண்டும். ஆம்! உன் குழந்தை எதோ இந்த வேளையில் உன்னைச் சிரித்து மகிழவைக்கும் ஒன்று மட்டுமன்று, வழிவழியாக உன் வாழ்வையும், வளத்தையும், பிறவற்றையும் சிறக்க வைக்கும் செல்வக்களஞ்சியம் அதுவாகும்.

‘பிள்ளைக் கனி அமுதே—கண்ணம்மா
      பேசும் பொற் சித்திரமே
அள்ளி அணைத்திடவே—என்முன்னே

      ஆடி வரும் தேனே’

என்று பாரதியார் பாடும்போதே குழந்தை நம்முன் ஆடி ஓடி வருவது போன்றே ஒரு மயக்க நிலை உண்டாகிறதல்லவா?