109
தான், பேசவேண்டும் போலிருக்கிறது! போர்! ஆம் மன்னன் நம்மைப் போருக்கு அழைக்கிறான்! அவன் போர்க்கோலம் பூண்டுவிட்டான்! இனி நாமும் அதற்கு தயாராக வேண்டியதே, என்று தீர்மானித்தனர்.
அந்த ஐவர், துரோகிகள் என்றால், நாம் எல்லாம் யார்? என்று கேட்டுக்கொண்டனர், மாமன்றத்தார்; உடன் பணியாற்றும் தோழர்களாகிய நாமும், துரோகிகளே!! என்று கூறவேண்டுமா! ஐவரைக் காட்டி நம் அனைவரையும்தான் மன்னன் பழிக்கிறான். நாட்டு மக்களின் சார்பிலே நாம் உறுப்பினரானோம், நம் சார்பிலே ஐவர் அரசனுக்குப் பலியாகவேண்டும்போலும் என்றனர்.
நாடு பதைத்தெழுத்தது. ஐவரைக் காப்போம் அவர் மீது அரசன் ஆணை பாயச்சம்மதியோம் என்று ஆர்ப்பரித்தனர். எந்த நேரத்தில் அரசன் படையினர் ஐவரைக் கைது செய்யவருமோ என்ற எண்ணத்தில், அன்று இரவு முழுவதும் இலண்டன் நகரமாந்தர், போர்க்கோலத்துடன் விழித்தவண்ணம் இருந்தனராம். வெளி நகர்களிலிருந்து நாலாயிரம் குதிரை வீரர்கள், லண்டன் வந்து சேர்ந்தனராம். கடுமையாகப் போரிட்டு, மக்களைக் கொன்று குவித்த பிறகே, ஐவரைச் சிறைப்படுத்த முடியும், என்று நாடு கூறிவிட்டது. நாடாளும் மன்னனால், ஐவரைச் சிறைப்படுத்த முடியவில்லை, மக்கள் ஐவருக்கு அரண் அளிக்கிறார்கள்!
வெடிமருந்துச் சாலைக்கருகே தீக்குச்சி போலாகிவிட்டது ஐவரைக் கைதுசெய்ய மன்னன் முனைந்தது. அடுத்த கட்டம், போர்! வேறில்லை என்பது விளக்கமாகி விட்டது.
மன்னன் தாக்கீது அனுப்பினான் ஐவரைக் கைது