115
மக்கள் அவனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்—அவன் பட்டிருந்த பத்தாயிரம் பவுன்கடனையும், அவன் சார்பில் மாமன்றமே செலுத்திற்று.
இரு மாவீரர், பிம், ஹாம்டன் மறைந்தனர்—ஆனால் அவர்கள் ஊட்டிய ஆர்வம் வளர்ந்தது; மாஸ்டன் மூர், நியூபரி, நேஸ்பீ, என்று வெற்றிக்கீதம், மக்களுக்கு விருந்தளித்தது. மிரண்ட மன்னன், ஸ்காட்லாந்துக்காரரிடம் தஞ்சம் புகுந்தான்!
படைபலம்—கடைசி முயற்சி—அதிலேயும் மன்னன் தோற்றான்.
இதற்குப் பிறகு, மன்னன் நிலைமை, கைதியின் நிலைமைதான்—ஆனால் கட்டுக்கு அடங்கிய கைதி அல்ல தப்பி ஓட முயற்சித்தபடி உள்ள, கைதியின் நிலைமை.
நேஸ்பீ களத்திலே, மன்னன் தோற்றோடியபோது, அவனுடைய கடிதக்கட்டு, மாமன்றப் படையிடம் சிக்கிற்று—மன்னன், வெளிநாட்டவரைக் கொண்டுவரச் சதிபுரிவது, சாகசமாக மாமன்றத்தாரை ஏய்க்க விரும்புவது, பிரான்சு சென்றிருந்த தன் துணைவிக்கு எழுதி படையும் கருவியும் சேர்த்திட முனைந்தது, ஆகியவைகள் அம்பலமாயின. எழுபத்து இரண்டு பக்கம் கொண்ட துண்டு வெளியீடு மூலம் மாமன்றம் மக்களுக்கு இதனை அறிவித்தது.
தோல்வியை ஒப்புக்கொள்ளவோ, துயரால் தாக்குண்டு தலைகுனியவோ, மக்களிடம் மல்லுக்கு நின்றது போதும், இனி ஒழுங்கான ஆட்சி நடத்துவதாக உறுதி கூறிச் சமரசம் கோருவோம் என்ற விழைவோ, மன்னனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தப்பிச் செல்ல மார்க்கம் கிடைத்தால் மீண்டும் ஓர் முயற்சி செய்யலாம் என்பதே மன்னனுடைய எண்ணமாயிற்று.