117
மான்னனுக்குச் சொந்தமான மாளிகையில், சார்லஸ் சிறை வைக்கப்பட்டான்.
மன்னனை அப்போதும் மாமன்றத்தார் மரியாதைக் குறைவாக நடத்தவில்லை, உரிய மதிப்பளித்தனர்—வசதிகள் யாவும் செய்தனர்.
மாமன்றப் படைத் தலைவராக இருந்த பேர்பாக்ஸ், என்பவரே, மன்னனை எதிர்கொண்டழைத்தார்.
மக்கள், சிறைப்பட்ட மன்னனைக் காண வழி நெடுக நின்றனர்—கணக்கிடைக்காத காட்சி அல்லவா!!
சார்லஸ் மன்னன், முரட்டுத் தோற்றமும், பொறி பறக்கும் பேச்சினனுமல்ல, பார்ப்பதற்குப் பரமசாதுவாக இருப்பவன்—கனிவு வழியப் பார்ப்பான். கண்ணியமாகப் பழகுவான். எனவே, அவனைக் கண்ட மக்கள் தோற்றத்தையும் செயலையும் ஒப்பிட்டுப் பார்த்துத் திகைத்திருப்பர். இவ்வளவு நல்லவனாக இருக்கிறான், எத்துணை தீய காரியம் செய்தான்! என்று எண்ணியிருப்பர்.
ஐந்து திங்கள் இந்த மாளிகையில் அரசன், மாமன்றத்தின் கைதியாக இருந்தான். எந்த மாமன்றத்துக்குள்ளே நுழைந்து ஐவரைக் கைதுசெய்ய வந்திருக்கிறேன் என்று அதிகாரம் பேசினானோ, அதே மன்னன், அதே மாமன்றத்தின் கைதியானான். வரலாறு இது போன்ற சம்பவத்தை அடிக்கடியாகப் பொறித்திட முடியும்!
மன்னனிடம், சமரசம் காணவேண்டும் என்ற நோக்கமே மாமன்றத்துக்கு இருந்தது—ஆனால் காட்டு மிருகத்தை வீட்டில் கொண்டுவந்து பழக்கினாலும், அதன் காட்டுக் குணம் போவதில்லை என்பதுபோல, மன்னன், மாமன்றம் காட்டிய நட்புமூலம், தன் தீய எண்ணத்தை விட்டுவிடவில்லை.