உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அண்டை அயலில்‌ இருந்த பிரபுக்களின்‌ மாளிகைக்கு மன்னன்‌ செல்லலாம்‌, விருந்து உண்டு மகிழலாம், வேட்டை ஆடிக் களிக்கலாம், தடை ஏதும் இல்லை. ஆனால் இது எதற்குப் பயன்பட்டது? ஒற்றர்களிடம்‌ பேசி, ஓட வழிதேடுவதற்குத்தான்!

மீன்பிடித்துக்‌ கொண்டிருந்தான்‌ ஒருவன்‌. மன்னன் உலவச்‌ சென்றான்‌. மீன்பிடித்தவன்‌, மெள்ள மெள்ள மன்னனை அணுகி, இரகசியமாக ஒரு சுருளைத்‌ தருகிறான்‌. பிரான்சிலிருந்து, எனிரிடா அனுப்பிய கடிதம்‌ அது.

இப்படிப்பட்ட சம்பவம்‌ கண்டபிறகே, மாமன்றம்‌, கண்காணிப்புத்‌ தேவை என்ற முடிவுக்கு வந்தது. மன்னனுக்கு ஊழியம்‌ செய்பவர்கள்‌, ஒற்றர்கள்‌ என்பதறிந்து, அவர்களை நீக்கிவிட்டு, மாமன்றம்‌ வேறு ஆட்‌களை அமர்த்திற்று.

மன்னன்‌ இவ்விதம்‌! மாமன்றமோ, பிளவுக்கு இடமளித்துவிட்டது. நீண்ட காலமாக ஓயாது உழைத்து வந்தவர்களுக்கிடையே, கருத்து வேற்றுமை, பல பிரச்‌னைகளில்‌, முளைத்தன. எதிர்கால ஏற்பாடு பற்றி, முரண்‌பாடான எண்ணங்கள்‌ உலவின. கேட்டது கிடைத்துவிட்டது என்ற திருப்தி சிலருக்கு; கேடு களையப்படவில்லை என்ற எண்ணம்‌, சிலருக்கு; அரசன்‌ மீண்டும்‌ அரண்மனை புகவேண்டும்‌ என்று எண்ணியவர்களுக்கு அருமையான வாய்ப்பாகிவிட்டது, இந்தக்‌ கருத்து வேற்றுமை.

மாமன்றத்திலிருந்து மணி விளக்குகள்‌ அணைந்து விட்டதுபோல, பிம்‌, ஹாம்டன்‌ மறைந்துவிட்டனர்‌.

களம்‌ புகுந்து கடும்‌ போரிட்டோருக்கும்‌, கருத்தும்‌ போரில்‌ காலமெல்லாம்‌ செலவிட்டு, மக்களைப்‌ போர்‌ வீரராக்கியோருக்கும்‌ இடையே மனக்கசப்பு வளர்ந்தது.