உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

மாமன்றம்‌ அரசாள விழைந்தது; படையினர்‌, எமது கரம்‌ வலுவுடையது என்று வாதாடினர்‌.

கிராம்வெல்‌, இதுபோது, கீர்த்திமிக்க நிலைபெற்று, மாமன்றத்தை மங்கவைக்கும்‌ மாவீரனானான்‌.

கனி கிடைத்துவிட்டது, சாறு பிழிந்து பருகுவதா துண்டுகளாக்கித்‌ தின்பதா என்பதுபோல, வெற்றி கிடைத்துவிட்டது, இனி அதனைப்‌ பயன்படுத்துவது எம்‌முறையில்‌, என்பதுபற்றிக்‌ கருத்து வேற்றுமை முளைத்தது.

அந்த நேரத்தில்‌, குழப்பத்தைத்‌ தவிர்க்கவும்‌, சதிகளைச்‌ சாய்க்கவும்‌, வெளிநாட்டினர்‌ விபரீதப்‌ போக்கு ஏதும்‌ கொள்ளாமலிருக்கச் செய்யவும்‌, மீண்டும்‌ மன்னன்‌ சார்பிலே எத்தகைய இரத்தக்களறியும்‌ எற்படாது தடுக்கவும்‌, கிராம்வெல்லுக்குத்தான்‌ ஆற்றலும்‌ வாய்ப்பும்‌ இருந்தது.

கிராமத்துக்‌ கனவான்‌, கடும்‌ உழைப்பால்‌ உயர்ந்ததவன்‌, படையினருக்கு நண்பன்‌, தூய நடத்தையாளன்‌, கிராம்வெல்‌. அவன்‌ களத்திலே காட்டிய வீரமும்‌, படைவரிசைகளிலே புகுத்திய புது முறைகளும்‌, தன்னல மறுப்பாளர்களைத்‌ திரட்டிய நேர்த்தியும்‌, தலைமை இடத்துக்கு அவனைத்‌ தகுதியுள்ளவனாக்கிற்று.

சார்லசுக்குத்‌ தீர்ப்பளிக்கும்‌ பொறுப்பை ஏற்க கிராம்‌வெலே தகுதி வாய்ந்தவன்‌—மற்றோர்‌ காரணத்தால்‌.

சார்லஸ்‌, ஆண்டவன்‌ எனக்கு அருள்பாலித்திருக்‌கிறார்‌, அதனாலேயே நான்‌ மன்னனானேன்‌—என்று தத்துவம்‌ பேசினான்‌.

கிராம்வெல்‌ தான்பெற்ற வெற்றிகள்‌ அனைத்தும்‌, ஆண்டவன்‌ அருளாலே கிடைத்தன என்று நம்பிக்‌ கூறி வந்தவன்‌.