121
ஜாயிஸ் என்றோர் படைவீரன்—சிறு பிரிவுக்குத் தலைவன், மன்னன் இருக்கும் மாளிகையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். மாமன்றச்சார்பிலே காவலிருந்தவர்களின் கரம் ஒடுங்கிவிட்டது. கரத்தில் துப்பாக்கியுடன், சென்றான் மன்னனிடம்.
“புறப்படுக!”
“எங்கே?”
“இந்த இடத்தைவிட்டு”
“யார் நீ?”
“ஜாயிஸ்! படைவீரன்!”
“யார் உத்திரவுமீது வந்தாய்?”
“நானேதான்!”
“எங்கே உத்தரவு”
“உத்தரவைக் காட்டத்தான் வேண்டுமா! சரிஅதோ யாரும், உத்தரவு.”
வெளியே நிற்கும் சிறு படையைக் கண்டான் மன்னன், சீறிப் பயனில்லை, ஜாயிசுடன் கிளம்பினான்.
ஜாயிஸ், இங்ஙனம் மன்னனை முரட்டுத்தனமாக அழைத்துச் செல்ல முற்பட்டாலும், மன்னன் உடன்வர இணங்கிய பிறகு, மரியாதையாக நடந்துகொள்ளலானான். மன்னனுடைய விருப்பப்படியே, நியூமார்க்கட் எனும் இடம் நோக்கிச் சென்றனர். அங்கு போய்ச் சேருமுன், ஓர் இரவு வழியில் உள்ள கிராமத்தில், ஓர் மாளிகையில் தங்கினர். அந்த மாளிகை முன்னம் கிராம்வெலுக்குச் சொந்தமாக இருந்தது!
பேர்பாக்ஸ், கிராம்வெல், ஆகியோர், மன்னனை மரியாதையாகவே நடத்தினர்—அவன் விருப்பப்படியே வசதிகள்-உபகாரத்துக்கு ஏற்பாடுகள்-வின்சர் நகரிலே மன்னன் சிறை வைக்கப்பட்டான்.