122
மாமன்றம் அனுப்பிய சமரச ஏற்பாடு ஒருபுறம், படையினர் அனுப்பிய ஏற்பாடு மற்றொருபுறம்; மன்னனிடம் வந்தன.
மக்கள் உரிமையை மதித்து ஆட்சி செய்யவேண்டும் அதற்காக மாமன்றம் இயற்றிய சட்டங்களின்படி ஒழுக வேண்டும், எதேச்சாதிகார ஆட்சிக்குத் துணையாக இருந்த துரோகிகளின் மீது மாமன்றம் நடவடிக்கை எடுக்கும்போது குறுக்கிட்டு அவர்களை மன்னிக்கக் கூடாது, மாமன்றத் தேர்தலுக்கு, மன்னன் முகாமில் இருந்தவர்கள் நிற்கலாகாது, என்பன நிபந்தனைகள்.
“மிச்சம் என்ன இருக்கும், முடிதானே!” என்று அலட்சியமாகக் கூறிச் சார்லஸ், உடன்பாட்டுக்கு வர மறுத்தான்.
படை வரிசையினரோ இதனினும் குறைந்த அளவிலேயே நிபந்தனைகள் விதித்தனர். துரோகிகள் பட்டியல் தயாரிக்கப்படும்போது, முக்கியமானவர்கள் வரையிலாவது மன்னன் குறுக்கிடாமலிருக்க வேண்டுஎன்று கேட்டனர். இதற்கு மன்னன் இணங்கவில்லை.
அரியாசனத்தைத் தூசி துடைத்து அலங்காரம் செய்து, மன்னனை அமரச்செய்து, அவன் எதிரில் கைகட்டி வாய்பொத்தி மாமன்றத்தார் குற்றேவல் புரியக்காத்துக் கிடக்கவேண்டும். அக்ரம ஆட்சிக்குத் துணை நின்றவர்கள் பழையபடி துதிபாடித் தூபமிட்டு, பதவி பெற்றுக் கொழுப்பர்—இதற்கா களம் புகுந்தனர், கஷ்ட நஷ்டம் ஏற்றனர், குருதி கொட்டினர்! மன்னன், எந்தச் சமயத்திலும், இழந்த ஆதிக்கத்தைத் திரும்பிப் பெற ஒரு துரோகக் கும்பலை நம்பி இருந்தான், எனவே தான் துரோகிகள் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்தான்.