123
ஸ்காத்லாந்திலிருந்தாவது, அயர்லாந்திலிருந்தாவது உதவி கிடைக்கும் என்ற ஆசை அகலவில்லை. இராணி எனிரிடாவும் முயற்சியைக் கைவிடவில்லை. இந்நிலையில் உடன்பாட்டுக்கு வராமல், ஆனால் அதேபோது உடன்பாடு குறித்துப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டுவதே சாலச் சிறந்ததென மன்னன் எண்ணினன்.
படையினர் அமைத்திருந்த கட்டுக்காவலை ஏய்த்துவிட்டு மன்னன் வெயிட் தீவு எனும் இடம் சென்றான். இங்கு கவர்னராக இருந்த இளைஞர், கண்ணியமாக, ஆனால், கண்டிப்புடன் மன்னனை நடத்தி வந்தார்.
இராணி எனிரிடாவின் முயற்சியால், கலம் ஒன்று தாயராகிவிட்டது. மன்னன் அதிலேறி பிரான்ஸ் செல்லலாம். பிறகு ஐரோப்பிய நாடுகளிலே, மன்னராட்சியை ஆதரிப்பவர்களின் துணையைத் திரட்டி, பிரிட்டன் மீது பாயலாம். மாமன்றம் அரும்பாடுபட்டுப் பெற்ற வெற்றியை, அழித்திடலாம். வாய்ப்புக் கிடைக்கிறது என்று மன்னன் சார்பினர் எண்ணிக்கொண்டனர். ஆனால் மன்னன் உடனடியாக ஓடிவிட விரும்பவில்லை. ஸ்காத்லாந்துக்காரரிடம் ‘பேரம்’ பேசிக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில், மன்னன் தங்கியிருந்த இடத்திலேயே குழப்பம் உண்டாக்கி, மன்னனைத் தப்பிவிடச் செய்வதற்குச் சிறு சிறு முயற்சிகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. மாமன்றம் அமைக்கும் புதிய அரசியல் திட்டம் தங்கள் சுகபோக வாழ்வைக் குலைக்கும் என்று எண்ணிய சுயநலமிகள், இத்தகைய முயற்சிகளைத் தூண்டிவந்தனர்.
“மன்னனைக் காக்க மாவீரரே வாரீர்!
வேந்தனை விடுவிக்கத் திரண்டு வாரீர்!
புரட்சி பொங்குக! மன்னன் வாழ்க!