127
அழகழகாகச் சுருளை சுருளையாக இருந்த முடி, பொலி விழந்துவிட்டது. எந்த மன்னனும் பெறத் துணியாத பெருநிலை கேட்டவன் சார்லஸ்! ஆண்டவனுக்குச் சமம் அரசன் என்ற தத்துவம் பேசினவன், மக்களுக்கு, எது உரிமை, எது நன்மை என்பதை அறியும் ஆற்றலே மன்னனுக்குத்தான் உண்டு என்று வாதாடியவன், அந்தத் தீதான தத்துவத்துக்காக ஒரு நாட்டையே படுகளமாக்கிவிட்டவன், பதினோராண்டுகள் மாமன்றம் கூட்டாமல் அரசு புரிந்தவன். பிரபுக்கள் பலர் பணிவிடை செய்வர்; பிரதாபம் கூறிடுவோர் பலர்! அவனை எதிர்த்தோர், சிறையிலும் தூக்குமேடையிலும் உயிரிழந்தனர்! அப்படிப்பட்ட சார்லஸ் மன்னன் அடைப்பட்டுக் கிடக்கிறான்; ஆலிவர் கிராம்வெல்லின் பேனா முனையில், மன்னன் எதிர்காலம் இருக்கிறது.
கணவனுக்கு உற்ற கதியை எண்ணிக் கண்ணீர் வடித்தவண்ணம் எனிரிட்டா அரிசி; பிரான்சில்.
இடையே கடல், ஒருபுறம் மன்னன் சிறையில், மற்றோர்புறம் சிறையிலும் கொடிய நிலையில் ராணி பிரான்சில்.
இளவரசன், தந்தையுடன் இல்லை. கடைசி மகனும், மகளும்மட்டுமே பிரிட்டனில் உள்ளனர்.
“என் தலையைவெட்டிவிடுவார்கள், மகனே! வெட்டி விடுவார்கள்!” என்று மகனிடம் மன்னன் கூறுகிறான். மன்னனிடம் கடைசி நாள்வரை பணியாளராக இருந்தவர்கள் கசிந்துருகி அழுகிறார்கள். மன்னன் சாகத் துணிந்துவிட்டான்; படையினரின் போக்கை ஆதரித்த மாமன்றம் மரண ஓலை தயாரிக்க இணங்கிவிட்டது.
ஜான்பிராட்ஷா என்ற வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.