பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 133 தமக்கு மகளைக் கட்டிக் கொடுத்தவர்களைப் போற் றாமல் தூற்றுபவர்கட்கு உலகத்தில் உய்வே இல்லை என்னும் வேமன்னரின் கருத்தை, வரதட்சணைக் கொடு மைக்காரர்கள் உணர்வார்களா? உடம்பிற்குள் உள்ள இறைவனைக் காண முயலாமல் கற்களைக் கடவுள் என்று வணங்குதல் ஏனோ? கற்கள் பேசுமா? -என்னும் காரசாரமான கருத்தைக் கூறவும் வேமன்னர் தயங்கவில்லை. இங்கே, "நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றி வந்து மொணமொணத்துச் சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’ என்னும் சித்தர் சிவ வாக்கியரின் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. கோயிலுக்குச் சென்று மொட்டையடித்துக்கொண்டு உண்டியில் பணம் போடுவது மட்டும் போதாது; ஏழை கட்கும் உதவவேண்டும் என்கிறார். இல்லாதவனை எவரும் மதியார்; செல்வனையே மதிப்பர். செல்வனுக்குச் சிறு புண் உண்டாயினும் சென்று காணும் பலர், ஏழை வீட்டுத் திருமணத்திற்கும் செல்ல மாட்டார்கள் என்று வருந்துகிறார் வேமன்னர். மனைவியின் பேச்சைத் துணையாகக் கொண்டு மற்ற உறவினரின் துணையைக் கைவிடுதல், நாயின் வாலைத் துணையாய்ப் பற்றிக்கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்க முயல்வது போலாகும் என்பதும் வேமன்னரின் கருத்துதான். வேமன்னரின் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் களில் பொதிந்து கிடக்கும் அறிவுரைகளை எடுத்துக் கூற நாள் போதாது.