பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அவன் தங்கை கண்ணம்மா ஏழாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அசோக் இவர்களுடைய அத்தை மகன். அவன் சென்னை மாநகரிலே தன் தாய் தந்தையருடன் இருந்துகொண்டு எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவன் கோடை விடுமுறைக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் வீட்டிற்கு வருவதை அறிந்து, கந்தசாமிக்கும் கண்ணம்மாளுக்கும் ஒரே குதூகலம். கிராமத்துப் பண்ணை வேலையெல்லாம் அசோக்குக்குப் புதுமையாக இருக்கும். ஏர் உழுதல், நாற்று நடுதல், பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் இவற்றையெல்லாம் அசோக் சென்னையிலே பார்த்திருக்க முடியாது. தங்கள் பண்ணைக்கு அழைத்துச் சென்று இவ்ற்றையெல்லாம் அவனுக்குக் காட்டவேண்டுமென்று இருவரும் ஆவலுடன் இருந்தார்கள்.

ஆனால், அசோக் கிராமத்தில் வாழும் மக்களைப்பற்றி யெல்லாம் தாழ்வாகவே மதிக்கிறவன். கிராம மக்கள் பலவகையான மூடநம்பிக்கைகள் உடையவர்கள் என்பதும், விஞ்ஞான அறிவு இல்லாதவர்கள் என்பதும் அவன் கருத்து.

அதனால், அவன் அங்கு வந்து சேர்ந்தது முதற் கொண்டு, கிராமத்தில் தான் காணும் ஒவ்வொன்றைப் பற்றியும் பழித்துப் பேசியே வந்தான். புதிதாக அவன் பார்த்ததைக்கூட அவன் மதிக்கவில்லை, “மின்சார விசிறி உண்டா?. நல்ல மருத்துவர்கள் உண்டா?” — இப்படி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

கந்தசாமிக்கும் - கண்ணம்மாவுக்கும் அவனுடைய மனப்பான்மை பிடிக்கவில்லை. காணாதவற்றைக் காண்பித்தாலும் அசோக் அவற்றைப் பற்றி மகிழ்ச்சி தெரிவிக்கவே இல்லை. அத்துடன் அவன் , “கிராமத்தில் இருப்பவர்கள் பேய் என்பார்கள்; பிசாசு என்று கூறிப் பயப்படுவார்கள். விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும் இந்தக் குருட்டு நம்பிக்கைகள் போகவில்லை” என்று இடித்துக் கூறிக்கொண்டே இருந்தான்.