பக்கம்:மணிவாசகர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகர் வரலாறும் காலமும் தமிழ் இலக்கியம் பற்றியும் தமிழர்களாகிய நம்மைப் பற்றியும் பரவலாகப் பேசப்படுகின்ற குறை ஒன்றுண்டு. அது என்னை யெனில் தமிழர்களாகிய நமக்கு வரலாற்று அறிவு கிடையாது என்பதேயாம். நம்முடைய மிகச் சிறந்த கவிஞர்கள்கூட என்று தோன்றினர்? எங்கே தோன்றினர்? என்பதுகூட நமக்குச் சரிவரத் தெரியாது. ஒப்புயர்வற்ற குறளை இயற்றிய ஆசிரியனைப் பற்றியோ நெஞ்சை அள்ளும் சிலம்பைப் படைத்த புலவனைப் பற்றியோ உலக காப்பியங்களுடன் ஒப்புமை சொல்லக் கூடிய இராமாயணம் இயற்றிய கம்பநாடனைப் பற்றியோகூட யாதொன்றும் தெரியாது. இவர்கள் இயற்பெயரையும் என்று தோன்றி னார்கள் என்பதையுங்கூட நாம் அறியவில்லை. எனவே, வரலாற்று அறிவு குறைந்தவர்கள் என்று பிறர் குறை கூறும் பொழுது நாம் அதனை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்பெருமக்களின் நூல்கள் இன்றுள்ளன என்றாலும் இவற்றில் எத்துணைப் பாட பேதங்கள்! எத்துணை இடைச் செருகல்கள்! ஷேக்ஸ்பியருக்குள்ளது போன்ற வேரியோரம் பதிப்புகள் கம்பனைப் பொறுத்தவரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் உதவியால் நம்மிடம் உண்டெனினும் இப்பாட பேதங்களுள் எது புலவனுடையது? அவனே முதலில் ஒரு சொல்லைப் போட்டுப் பாடிவிட்டுப் பின்னர் மற்றொரு சொல்லைப் பயன்படுத்தினானா என்று கேட் டால் விழிப்பது தவிர வேறு வழி இல்லை. இவை எல்லாம் ஏன் நிகழ்ந்தன? சரியான முறையில் புலவர்கள் வரலாற் றையும், அவர்கள் வாழ்ந்த காலத்தையும் குறித்து வையா மையினால்தான் இத்தகைய பிழைகள் நிகழ்ந்தன என்பது நியாயமானதே. அப்படியானால் ஏன் நம்மவர்கள் இந்த இன்றியமையாத தகவல்களைச் சேகரித்து வையாமற் போயினர்? தமிழ் நாட்டு வரலாற்றின் கதியே இவ்வாறு என்றால் தமிழ் இலக்கிய வரலாற்றின் கதியும் இதுதான். 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/145&oldid=852493" இலிருந்து மீள்விக்கப்பட்டது