பக்கம்:மணி பல்லவம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

113

விட்டுத் தாம் வீட்டோடு இருந்து கொண்டார் அவர். அந்த நாளிலிருந்தே அருட்செல்வ முனிவரை அவருக்கும் அவரை அருட்செல்வ முனிவருக்கும் நன்றாகத் தெரியும். அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளையாகிய இளங்குமரனும் வளநாடுடையாரின் மூத்த மகனாகிய கதக்கண்ணனும் போர் முறைகளும் படைக்கலப் பயிற்சிகளும் பெறுகிற இளமையிலேயே சேர்ந்து கற்றவர்கள், சேர்ந்து பயின்றவர்கள். மருவூர்ப் பாக்கத்தில் ‘நீலநாகர் படைக்கலச்சாலை’ என்று ஒன்று இருந்தது. அந்தப் படைக்கலச் சாலையின் தலைவரான நீலநாக மறவர் பூம்புகாரிலேயே பெரிய வீரராகப் போற்றுதல் பெற்றவர். இளங்குமரனும் கதக்கண்ணனும் தங்களுடைய உடல் வலிமையை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமானவர் அந்த மறவர்தான். அந்த மறவரிடம் இளங்குமரனையும் கதக்கண்ணனையும் கொண்டுபோய்ச் சேர்த்தது வளநாடுடையார்தாம். அருட்செல்வ முனிவரைத் தேடிக் கொண்டு அலைந்தபோது வளநாடுடையாருக்கு இந்தப் பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. கந்திற்பாவை கோட்டம், உலக அறவி, சம்பாபதி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் தேடி அலைந்துவிட்டு அவற்றைச் சார்ந்திருந்த சக்கரவாளக் கோட்டத்தின் மதிலருகே வந்து நின்றார் வளநாடுடையார். மாலைப்போது நெருங்கிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைவதற்கு நான்கு புறமும் வாயில்கள் உண்டு. செழுங்கொடி வாயில், நலங்கிளர் வாயில், வெற்றிடை வாயில், பூதம் நின்ற வாயில் என்னும் நான்கு மாபெரும் வாயில்கள் சக்கரவாளக் கோட்டத்து நாற்புற மதில்களில் அமைந்திருந்தன. அவற்றுள் பூதம் நின்ற வாயில் வழியாக நுழைந்து போனால் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையை எளிதாக அடையலாம். பூதம் நின்ற வாயில் என்பது விநோதமான அமைப்பை உடையது. பெரிய பூதம் ஒன்று சிலை வடிவில் தன் இரண்டு கால்களையும் அகற்றி நிற்பதுபோல் அவ்வாயில் கட்டப்பட்டிருந்தது. வானளாவி

ம-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/114&oldid=1141784" இலிருந்து மீள்விக்கப்பட்டது