பக்கம்:மணி பல்லவம் 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

மணிபல்லவம்

“நான் வந்து அரை நாழிகைக்கு மேலாகி விட்டதம்மா. நீங்கள் இங்கிருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தேன். சித்திரச்சாலைக்குள் தந்தையாரையும் ஓவியனையும் பார்த்தபின் எனக்குப் பயமாயிருந்தது. நடுக்கத்தோடு பேசாமல் இந்த அறைக்குள் வந்து பதுங்கி விட்டேனம்மா” என்று இன்னும் அந்த நடுக்கம் குன்றாமலே பதில் கூறினாள் தோழிப் பெண் வசந்தமாலை.

“நீ போன காரியம் என்ன ஆயிற்று, வசந்தமாலை? அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே நீ!”

“அதையேன் கேட்கிறீர்கள், அம்மா! நீங்கள் குறிப்புக் காட்டினீர்களே என்று நான் அவரைப் பின்தொடர்வதற்குப் போனேன். ஆனால் எனக்கும் முன்பாகவே உங்கள் தந்தையார் அவரைப் பின்தொடரச் சொல்லி ஆள் நியமித்திருக்கிறாரேயம்மா!”

இதைக் கேட்டதும் சுரமஞ்சரியின் முகம் இருண்டது. ‘தந்தையார் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?’ என்ற கேள்வி அவள் நெஞ்சத்தில் பெரிதாக எழுந்தது.

“அவரைப் பின் தொடர்வதற்குத் தந்தையார் அனுப்பியிருந்த ஆள் யாரென்று உனக்குத் தெரியுமா வசந்தமாலை?”

“தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும் அம்மா! உங்கள் தந்தையார் வாணிகத்துக்காகச் சீனம், யவனம் முதலிய தொலைதூரத்து நாடுகளுக்குக் கடற் பயணம் செய்யும் போதெல்லாம் தவறாமல் உடன் அழைத்துக் கொண்டு போவாரே அந்த ஒற்றைக்கண் மனிதர்தான் அவரைப் பின் தொடர்ந்தான்.”

“யார்? நகைவேழம்பரையா சொல்லுகிறாய்? அவரை இப்படிப்பட்ட சிறிய வேலைகளுக்கெல்லாம் தந்தையார் அனுப்புவது வழக்கமில்லையே!”

“நானென்ன பொய்யா சொல்லுகிறேன்? என்னுடைய இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்ததைத் தானே சொல்லுகிறேனம்மா. அவருக்குப் பின்னால் நானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/127&oldid=1141800" இலிருந்து மீள்விக்கப்பட்டது