பக்கம்:மணி பல்லவம் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

மணிபல்லவம்

‘செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை’— என்று அவர் பயந்ததற்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அங்கு வேறுவிதமாக நிகழலாயின. அவர் நின்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து தவச்சாலையின் உட்பக்கம் ஒன்றரைப் பனைதூரம் இருந்தது. எனவே தீபத்துக்கும், சுவடிக்கும் அருகில் குனிந்து அமர்வது போல் தெரிந்த ஆளை அவர் நன்றாகக் காண முடியவில்லை, ‘அந்த ஆள் அங்கே அமர்ந்து சுவடியைப் படிப்பதற்குத் தொடங்கக் கூடும்’ என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.

உள்ளே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகே கீழ் நோக்கித் தாழ்ந்த கைகள் சுடர் அணைந்துவிடாமல் தீபத்தை நிதானமாக மேலே தூக்கித் தவச்சாலையின் தென்னோலைக் கூரை இறப்பின் விளிம்பில் நெருப்புப் பற்றும்படி பிடித்தன. காய்ந்த ஓலைக் கீற்றுக்களின் நுனிப் பகுதியில் தீ நாக்குகள் எழுந்தன. வளநாடுடையார் திடுக்கிட்டார். உள்ளே இருப்பவர் முனிவராயிருக்கலாம் என்று தாம் நினைத்தது பிழையாகப் போனதுமின்றி உள்ளே மறைந்திருந்தவர் என்ன தீச்செயலைச் செய்வதற்காக மறைந்திருந்தார் என்பதும் இப்போது அவருக்கு விளங்கிவிட்டது. மறைந்திருந்தவர் வேற்றாள் என்பதும் புரிந்துவிட்டது.

“அடே, பாவி! இதென்ன காரியம் செய்கிறாய்? ஒரு பாவமுமறியாத முனிவர் தவச்சாலையில் நெருப்பு மூட்ட முன் வந்திருக்கிறாயே, உன் கையிலே கொள்ளி வைக்க...” — என்று உரத்த குரலில் இரைந்து கொண்டே தீ மூட்டும் கையைக் குறிவைத்துத் தம்மிடமிருந்த வேலை வீசினார் அவர். குறியும் தப்பாமல் குறிவைக்கப்பட்ட இலக்கும் தப்பாமல் சாமர்த்தியமாக அவர் எறிந்திருந்தும், அந்த வேல் அவர் நினைத்த பயனை விளைவிக்கவில்லை.

தீபத்தைக் கீழே நழுவ விட்டுவிட்டு அதே கையினால் அவர் எறிந்த வேலைப் பாய்ந்து பிடித்துவிட்டான் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/133&oldid=1141807" இலிருந்து மீள்விக்கப்பட்டது