பக்கம்:மணி பல்லவம் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

169

பணி புரிவதற்கு நியமித்திருக்கிறேன். எல்லாம் உனக்காகத் தான் பெண்ணே! ஓவியக்கலையில் உனக்கு இருக்கும் பற்று எனக்குத் தெரியும். இவனைப் பயன்படுத்தக் கொண்டு உனது சித்திரச்சாலையின் எஞ்சிய இடங்களை யெல்லாம் சித்திரங்களால் நிரப்பி விடலாம்” என்று அவள் முகத்தில் மலர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டே கூறிய அவர் அங்கே மலர்ச்சி தோன்றாததைக் கண்டு திகைத்தார். ஓவியன் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. அவன் முகத்தில் பதவி பெற்ற பெருமிதம் இல்லை, ஏதோ பயம்தான் இருந்தது. தந்தையார் நல்ல செய்தி என்று தொடங்கிக் கூறிய இந்தப் பதவி நியமனம் அவள் மனத்தில் பல சந்தேகங்களை உண்டாக்கியது.


22. நகைவேழம்பர் நடுக்கம்

ணிமார்பன் என்னும் அந்த ஓவியனைத் திரும்பிப் போக விடாமல் தன் தந்தையார் மாளிகையிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதன் மெய்யான நோக்கம் என்னவாக இருக்கும் என்று சுரமஞ்சரி சிந்தித்தாள். தன்னுடைய சித்திரச்சாலைக்குப் படங்கள் வரைந்து நிரப்புவதற்காகவே அவனை மாளிகையின் ஓவியக் கலைஞனாகப் பதவி தந்து நியமித்திருப்பதாகத் தந்தையார் கூறியதை அவள் அப்படியே நம்பி ஒப்புக் கொள்வதற்கு இயலவில்லை. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட அந்தரங்க நோக்கம் ஒன்று தந்தையாருக்கு இருக்குமென்று அவள் சந்தேகப்பட்டாள். ஓவியனுக்குப் பதவியளித்திருக்கும் செய்தியைத் தந்தையார் தாம் மகிழ்ச்சியோடு கூறினாரே தவிர அதைக் கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த ஓவியன் முகத்தில் மலர்ச்சியோ மகிழ்ச்சியோ தோன்றவில்லை என்பதையும் அவள் கவனித்திருந்தாள். அது வேறு அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/170&oldid=1141969" இலிருந்து மீள்விக்கப்பட்டது