பக்கம்:மணி பல்லவம் 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

193

தயங்கினான். அந்தக் குறிப்பு இளங்குமரனுக்குப் புரிந்தது. ஓவியன் தன்னிடம் தனியாகப் பேசுவதற்கு விரும்புகிறான் என்று உணர்ந்தவனாக அவனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு படைக்கலச் சாலையின் வேறு பகுதிக்குச் சென்றான் இளங்குமரன்.

“பிறருக்காக நான் துன்பப்படும்படி நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன் மணிமார்பா! ஆனால் என்னால் பிறர் துன்பப்பட நேருவதை நான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. விவரமாக நடந்ததைச் சொல். நான் வெளியேறி வந்தபின் பட்டினப்பாக்கத்தில் அந்த மாளிகையில் என்ன நடந்தது? உனக்கு அந்தப் பெண் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த நூறு பொற் கழஞ்சுகளைத் தந்தாளா இல்லையா!”

“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் இந்த மடலை வாங்கிக் கொள்ளுங்கள். இதைப் படித்துவிட்டுப் பின்பு பேசலாம்” என்று சுரமஞ்சரியின் மடலை எடுத்து நீட்டினான் மணிமார்பன். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த பகுதியெல்லாம் தன் மணத்தைப் பரப்பியது அந்த நறுமண மடல்.

“ஆயிரங்காலம் பழகி அன்பு கொண்டவளைப் போல் எனக்கு மடல் எழுத இவள் எப்படி உரிமை பெற்றாள்?” என்று அருகிலிருந்த தீபத்தில் மடலைப் படித்துவிட்டுக் கோபத்தோடு கேட்டான் இளங்குமரன், அதைக் கேட்டு மணிமார்பன் மெல்லச் சிரித்தான்.

“எதற்காகச் சிரிக்கிறாய்? சிரிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது?”

“ஒன்றுமில்லை! அனால் சற்றுமுன் நீங்கள் கூறியதை மறுபடியும் நினைத்துப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. உலகத்திலேயே கட்டுப்பாட்டுக்கும் கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாகப் பிறந்து வளரும் உணர்வு அன்பு ஒன்றுதான்; அதற்குக்கூட உரிமை தர மறுக்கிறீர்களே நீங்கள்?”

ம-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/194&oldid=1142000" இலிருந்து மீள்விக்கப்பட்டது