பக்கம்:மணி பல்லவம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

195

பட்டினப்பாக்கத்து மாளிகையிலிருந்து வெளியேறியபின் தனக்கு அங்கு ஏற்பட்ட அச்சமூட்டும் அநுபவங்களை மணிமார்பன் அவனுக்கு விரிவாகச் சொன்னான். தன்னை அந்த மாளிகையிலேயே ஓவியனாக நியமித்திருப்பதையும் சொன்னான். சுரமஞ்சரியின் தந்தையும், நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும் பலவகையிலும் சந்தேகத்துக்கும் பயப்படுவதற்கும் உரியவர்களாயிருந்ததையும், அவர்கள் இருவரும் இளங்குமரன் மேல் என்ன காரணத்துக்காகவோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதையும் விவரித்துக் கூறிவிட்டான் மணிமார்பன்.

இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் இளங்குமரனின் மனத்தில் மேலும் சந்தேகங்கள் உண்டாயின. அந்த மாளிகையிலிருந்து தான் வெளியேறிய போது அதே ஒற்றைக்கண் மனிதர் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். ஒற்றைக் கண்ணரைப் போலவே சுரமஞ்சரியின் தோழி வசந்தமாலையும் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததனால்தான் நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் தான் தங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இப்போது இளங்குமரனால் அநுமானம் செய்ய முடிந்தது. பட்டினப்பாக்கத்து எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரும், அவரிடம் இருக்கும் ஒற்றைக் கண் மனிதரும் எதற்காகவோ தன்னைப் பிடித்து அழிக்கக் கண்ணி விரிக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. ‘ஒரு வேளை அவர்கள் விரிக்கும் அந்த வலையில் தன்னைச் சிக்க வைப்பதற்கு இந்தப் பெண் சுரமஞ்சரியும் உடந்தையாயிருக்கலாமோ?’ என்றும் சந்தேகமுண்டாயிற்று இளங்குமரனுக்கு. சுரமஞ்சரியைப் பற்றிய தன்னுடைய சந்தேகத்தை மணிமார்பனிடம் வெளியிட்டு, ‘அப்படியும் இருக்கலாமோ?’ என்று வினவினான் இளங்குமரன். ஆனால் மணிமார்பன் அதை மிகவும் வன்மையாக மறுத்துச் சொல்லிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/196&oldid=1142002" இலிருந்து மீள்விக்கப்பட்டது