பக்கம்:மணி பல்லவம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மணிபல்லவம்

முல்லை தன்னை அலங்கரித்துக் கொண்டு புறப்படுவதற்குச் சித்தமானாள். கண்களிலும், முகத்திலும் உடலிலும் பிறக்கும் போதே உடன் பிறந்து அலங்கரிக்கும் அழகுகளைச் செயற்கையாகவும் அலங்கரித்தபின், வழிபாட்டுக்கும் படையலுக்கும் வேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் முல்லை. படையலுக்காக நெய்யில் செய்து அவள் எடுத்துக் கொண்டிருந்த பணியாரங்களின் நறுமணத்தை இளங்குமரன் நுகர்ந்தான். முனிவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டே பின் கிழவரைப் பார்த்து, “ஐயா! நானும் முல்லையும் நண்பகலுக்குள் பூதசதுக்கத்திலிருந்து திரும்பிவிடுவோம். அதற்குள் கதக்கண்ணன் வந்தால் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள். நான் அவனிடம் சில முக்கியமான செய்திகள் பேசவேண்டும்” என்று கூறினான் இளங்குமரன்.

“ஆகா! வேண்டிய மட்டும் பேசலாம், தம்பி! கவனமாக அழைத்துக் கொண்டு போய்வா, முல்லையைப் பூதசதுக்கத்தில் விட்டுவிட்டு நீ உன் போக்கில் மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு சுற்றக் கிளம்பிவிடாதே. அவளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்த பின் நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம்” எனக் கிழவர் எச்சரிக்கை செய்தபோது முல்லையும் இளங்குமரனும் சிரித்துக் கொண்டே வெளியேறினார்கள்.

முதல் நாளிரவிலிருந்து தன்னுடைய மனத்தில் மிகுந்து வரும் துன்பங்களையும் தவிப்பையும் அந்தச் சமயத்தில் ஒரு வழியாக மறந்துவிட முயன்ற இளங்குமரன் முல்லையோடு உற்சாகமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே சென்றான்.

“முல்லை! உன் தந்தையார் என்னைப் பற்றிப் பேசுகிற பேச்செல்லாம் ஒரு விதத்தில் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஊராருக்கெல்லாம் இந்திர விழாவின் தொடக்க நாளில் உற்சாகம் தேடிக் கொண்டு வருகிறதென்றால் என்னைத் தேடிக்கொண்டு அடிபிடி-போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/49&oldid=1141650" இலிருந்து மீள்விக்கப்பட்டது