பக்கம்:மணி பல்லவம் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மணிபல்லவம்

ஓவியனுக்கும் தருவதற்காக எதிர்ப்பக்கம் நடந்தாள் முல்லை.

பணியாரத்தை வாயிலிடுவதற்காக மேலெழுந்த இளங்குமரனின் வலக்கரம் பின்னாலிருந்த வேறொரு முரட்டுக் கரத்தால் தட்டிவிடப்பட்டது! எள்ளுருண்டைகள் அந்தரத்தில் பறந்தன. அடக்க முடியாத சினத்தோடு அழற்சி பொங்கும் விழிகளைப் பின்புறமாகத் திருப்பினான் இளங்குமரன். அங்கே அன்றையக் கணக்குக்கு அவனைத் தேடி வர வேண்டிய வம்பு வந்திருந்தது, தனியாக வரவில்லை! பயங்கரமாகக் கட்சி கட்டிக் கொண்டு வந்திருந்தது! அவனது புயங்களின் தசை திரண்டது.


7. வீரசோழிய வளநாடுடையார்

வாழ்க்கையில் ஒவ்வோருணர்வுக்கும் மறுபுறம் என்பதொன்றுண்டு. சிலருக்குப் பிறர்மேல் ஏற்படுகிற அன்பின் மறுபுறம் வெறுப்பாக இருக்கும். அல்லது வெறுப்பின் மறுபுறத்தைத் திரும்பிப் பார்த்தால் தவிர்க்க முடியாத பேரன்பாக இருக்கும். ஒன்றாக இருப்பினும் நிறமும் தோற்றமும் வேறுபடும். உள்ளங்கையும் புறங்கையும் போல இந்த உணர்வுகளும், உறவுகளும் அமையும். நேரிற் காணும் போது. குத்தலாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டாலும் இளங்குமரனிடமிருந்து ஏதோ ஒரு கவர்ச்சி வீரசோழிய வளநாடுடையார் மனத்தினுள் அவனை நினைத்து ஏங்கும் பிணைப்பை உண்டாக்கியிருந்தது. இதனால் அந்த அநாதை இளைஞனை ‘உறுதியாக வெறுக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே அந்நினைவின் மறுபுறம் அவன் மேல் அவர் கவலையும், அக்கறையும் காட்டி வந்தார். அதற்குக் காரணமானதும் உணர்வு ஒருபுறம் விரும்பாமல் மனம் மறுபுறம் விரும்பியதுமான அன்புத் தூண்டுதல் அவருள் மிக அந்தரங்கமானதாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/59&oldid=1141675" இலிருந்து மீள்விக்கப்பட்டது