பக்கம்:மணி பல்லவம் 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தோரணவாயில்


பூரணமான இந்தக் கதை மாளிகையின் தோரணவாயிலில் ஆவல் பொங்க நிற்கும் வாசக அன்பர்களுக்குச் சில வார்த்தைகள். சற்றே கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் நிகழ்ந்த காலத்துப் பூம்புகார் நகரத்தையும், மதுரையையும், வஞ்சிமாநகரையும் ஒரு விநாடி உருவெளியில் உருவாக்கிக் காணுங்கள். பழைய பெருமிதத்தோடு சார்ந்த எண்ணங்களை நினைத்துக் கொண்டே காணுங்கள்.

அடடா! எவ்வளவு பெரிய நகரங்கள். எத்துணை அழகு! மாட மாளிகைகள் ஒருபுறம், கூடகோபுரங்கள் ஒருபுறம். சித்திரப் பொய்கைகள் ஒருபுறம், செந்தமிழ் மன்றங்கள் ஒருபுறம். பற்பல சமயத்தார் கூடி வாதிடும் சமயப் பட்டிமன்றங்கள் ஒருபுறம், கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூம்பொழில்கள்,- நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு அல்லவா அது சங்குகள் ஒலி விம்ம, மகரயாழும் பேரியாழும் மங்கல இசை எழுப்ப, மத்தளம் முழங்க, குழலிசை இனிமையிற் குழைய, நகரமே திருமண வீடுபோல், நகரமே நாளெல்லாம் திருவிழாக் கொண்டாடுவதுபோல் என்ன அழகு! என்ன அழகு! சொல்லி மாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!

நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த பழமையை நினைக்கும்போது, எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது. இன்று அந்தப் பழம்பெரும் நகரங்களையும் அவற்றின் அரச கம்பீர வாழ்வையும் நினைக்கும்போது நீங்கள் உணர்வதென்ன? விழிகளில் கண்ணீரும், நெஞ்சில் கழிவிரக்க நினைவும் சுரக்க, உருவெளியில் அந்த மாபெரும் நகரங்களைக் கற்பனை செய்து காண முயலும் போது உங்கள் செவிகள் அவற்றில் ஒலித்த இன்னொலிகளைக் கேட்கவில்லையா? உங்கள் நாசியில் அகிற்புகை, சந்தனம், நறுமண மலர்கள், மணக்கவில்லையா! உங்கள் சிந்தனை அவற்றின் வளமான பெரு வாழ்வை நினைக்கவில்லையா? அத்தகைய பெருநகரங்களின் செழிப்பு நிறைந்த வாழ்வினூடே நமது கதை நுழைந்து செல்கிறது என்பதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/8&oldid=1141563" இலிருந்து மீள்விக்கப்பட்டது