நா. பார்த்தசாரதி
419
நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் அன்றிரவு அந்த நாணற்காட்டில் ஒருவரையொருவர் சோதனை செய்து கொண்டபின் திரும்பவும் நண்பர்களாக மாறவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. அவர்களுடைய நட்பிலும் பகையுண்டு. பகையிலும் நட்பு உண்டு. பகை, நட்பு என்னும் நேர் முரணான குணங்கள் அவர்களைப் பொறுத்தவரை நேர்முரணாகவும் இருப்பதில்லை. அவர்களுக்கு நடுவே உறவைப் பின்னியிருந்த இரகசியங்களைப் பொறுத்த அந்தரங்கம் அது.
அன்று அதே இடத்தில் காவிரிப் படுகை மணலில் விடிகிறவரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பல பழைய சம்பவங்களை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக் கொண்டார்கள். ஓர் உண்மையை மனம் நெகிழ்ந்து ஒப்புக் கொண்டார் பெருநிதிச் செல்வர்.
“நகைவேழம்பரே! நீங்கள் கூறிய பின்பு என்னுடைய தைரியத்தின் எல்லை எனக்கே புரிகிறது. ஏழடுக்கு மாளிகையையும், செல்வத்தையும், எட்டிப் பட்டத்தையும், ஏவலாட்களையும் விட்டு விலகித் தனியாய் நிற்கும்போது நான் பலவீனமாகி விடுவது உண்மைதான்.”
“பலவீனம் எல்லாருக்கும் உண்டு ஐயா! நான்கூட ஒரு சமயம் உங்கள் பெண் சுரமஞ்சரிக்கு முன்னால் நடுங்கி நின்றிருக்கிறேன். அவளுடைய அலங்கார மண்டபத்தில் அவள் தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்த செய்தி ஒன்றை நான் திரைமறைவிலிருந்து கேட்க முயன்றேன். அவள் அதைத் தந்திரத்தால் கண்டு கொண்டாள். அப்போது நான் தலைகுனிய வேண்டியதாயிற்று. கோழைத்தனத்தால் தலைகுனியவில்லை. ஒட்டுக்கேட்க வேண்டுமென்ற ஆசையால் ஒரு பெண்ணின் அலங்கார மண்டபத்துக்குள் நுழைந்தது தவறுதான் என்று உள்ளுற எனக்கே பயமாயிருந்ததுதான் காரணம். நான் அப்படிச் செய்ததைப் பற்றி நீங்களோ உங்கள் பெண்ணோ என்னைக் கூப்பிட்டுக் கண்டித்திருந்தால்கூட நான் தலை குனியத்தான் செய்வேன். ஆனால் அந்த நாணத்தை