746
மணிபல்லவம்
இவருடைய வாயில் ஊற்றிப் பார்க்கலாம். இந்த இடத்தில் அதைவிட, அதிகமாகச் சத்துள்ள உணவு எதையும் இப்போது நாம் இவருக்குத் தருவதற்கு வழியில்லை” என்று அங்கே அருகில் தன்னுடன் இருந்தவனை ஏவினான். ‘பெருநிதிச் செல்வருக்கும் நகைவேழம் பருக்கும் என்ன காரணத்தினால் இத்தனை பெரிய முறிவு ஏற்பட்டது? இவரைக் கொன்று தீர்த்து விட்டுத் தாம் மட்டும் தனியே நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று ஆசைப்படும் அளவுக்கு அவர் இவர்மேல் வைரம் கொண்டது என்?’ என்பன போல் தன் மனத்தினுள் விடைபெறாத மலட்டு வினாக்களாய் நிற்கும் பல சந்தேகங்களைச் செத்துப் போவதற்கு இருக்கும் இந்த ஒற்றைக் கண் மனிதர் உயிருடன் இருக்கும் போதே இவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டு மென்று அந்தரங்கமாக உண்டான நைப்பாசையை அருவாளனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.
‘கொடுமையின் இலக்கணமாக விளங்கிய இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு இப்படி ஒரு பரிதாபமான சாவா?’ என்று எண்ணும்போதே இதன் இரகசியத்தை அறிந்து கொண்டு விட வேண்டும் என்ற ஆவல் அவனுடைய மனத்தில் உந்தியது.
நகைவேழம்பரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் வாயில் இனிய நெல்லிக்கனிச் சாற்றோடு கலந்த நீரை ஊற்றியும் அந்த முகத்திலிருந்த ஒற்றைக்கண் விழித்துக் கொண்டு தன்னைக் காணச் செய்வதற்காக அருவாளன் செய்த முயற்சிகள் வீண் போகவில்லை. அவர் கண் திறந்தார், மெல்ல மெல்ல வாய் திறந்து பேசவும் செய்தார். தன் எதிரே நிற்கிற கொலை மறவர்கள், தான் அப்போது கிடத்தப்பட்டிருந்த இடம், தன் நிலை, எல்லாவற்றையும் பார்த்துக் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளாமல், தனக்குத் தானாகவே புரிந்து கொண்டு ஒரு நிதானத்துக்கு வந்தபின் கிடத்தப்பட்ட இடத்தில் இருந்தே தலையை மட்டும் மெல்ல நிமிர்த்தி,