பக்கம்:மணி பல்லவம் 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

633

“வணிகனுக்குத் தவறு செய்ய வேண்டாம் என்ற மனச்சாட்சியே இருக்கலாகாது நகைவேழம்பரே! ஒவ்வொரு கணமும் தவறு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டே இருப்பவன்தான் சாமர்ததியமான வணிகன். கற்பூர வணிகனாயிற்றே. எல்லாம் நறுமணமாகத்தானிருக்கும் என்று நம்பலாகாது. மனம் கற்பூரத்துக்குத்தான் சொந்தம். அதை விற்கிறவன் கெட்ட நாற்றமுடையவனாகவும் இருக்கலாம்...

“வேண்டுமானால் நாம் அந்தக் கப்பலை எதிர் கொண்டு புறப்பட்டுத் தேடலாமே?” என்று மறுமொழி கூறினார் நகைவேழம்பர், இந்த ஏற்பாட்டின்படி மறு நாள் காலையில் வந்து சேரவேண்டிய கற்பூரக் கப்பலைத் தேடிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும். வந்து சேர வேண்டிய நாளில் எதிர்பார்த்த பொருளுடன் ஒரு கப்பல் வரவில்லையானால் அதைத் தேடி வேறு! கப்பலில் எதிர்கொள்வது அந்தக் காலத்துக் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களிடையே வழக்கமாயிருந்தது, மிகப் பெரிய கப்பல் வணிகராகிய பெருநிதிச் செல்வருக்கு அடிக்கடி இந்த வேலை ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படும் போதுகளில் அவரோடு நகைவேழம்பரும் அவருக்குத் துணை போவார்.

இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் சமதண்டத்து, ஆசீவகர்களோடு வாதம் புரிந்து கொண்டிருந்த நாட்களில் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் பூம்புகாரின் சுற்றுப்புறக் கடலில் கற்பூரக் கப்பலைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பதினைந்து யோசனை தூரம் வரை அலைந்து திரிந்தபின் சீனத்துக் கப்பல் எதிரே வருவது தென்பட்டது. கடற் காற்றுப் பயணத்துக்கு வசதியான திசையில் இல்லாததால்தான் இவ்வளவு தாமதமென்று காரணம் கூறினான் அக்கப்பல் தலைவனான சீனத்து வணிகன். பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் தாங்கள் தேடுவதற்காக ஏறிச் சென்ற கப்பலைத் துறைக்குத் திருப்பிக் கொணரும் பொறுப்பை அதன் மீகாமனிடம் ஒப்படைத்துவிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/24&oldid=1231455" இலிருந்து மீள்விக்கப்பட்டது