படகுக்குள் சென்றார். சீனர்களும் சோனகர்களுமாகிய முரட்டுக் கப்பல் ஊழியர்களயும் ஏற்றிக் கொண்டு குவித்த கற்பூரத்தைப் பண்டசாலையில் கொண்டு போய் இறக்கவும் விடாமல் அப்படியே புறப்பட்டு விட்டார் நகைவேழம்பர். தமது படகில் கற்பூரம் இறக்கிக் குவிக்கப்பட்டிருப்பதையே மறந்திருந்தார் அவர். முன்னால் போகும் மணிபல்லவத்துக் கப்பலைப் பின் தொடர வேண்டும் என்றும், அதே சமயத்தில் இன்னும் சிறிது தொலைவு சென்று கரை மறைகிறவரை தாங்கள் அந்தக் கப்பலைத் துரத்துவது போல் அதிலிருப்பவர் களுக்குத் தெரியலாகாதென்றும் படகைச் செலுத்து கிறவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் நகைவேழம்பர். தற்செயலாகச் செலுத்து கிற படகு போலவே, அந்தக் கப்பலை நெருங்காமல் விலகியபடியே பின்தொடர்ந்து கொண்டிருந்தது கற்பூரப் படகு. இதனால் வளநாடுடை யாரும், அவர் இளங்குமரனை அழைத்துக்கொண்டு சென்ற கப்பல் மீகாமனும் முதலிலேயே இந்தப் படகைக் கண்டிருந்தும் அவ்வளவாக தென் மேற் கவனம் செலுத்தவில்லை, சந்தேகமும் படவில்லை.
“ஏதோ படகில் சிறு வணிகர்கள் பொருள் ஏற்றிக் கொண்டு செல்லுகிறார்கள்” என்று நினைத்து விட்டு விட்டார்கள்.
கரை மறைத்து தனிமையான நடுக்கடலுக்கு வந்த பின்புதான் நகைவேழம்பர் தம்முடைய சுயரூபத்தைக் காட்டினார். முன்னால் செல்லும் கப்பலை நெருங்கித் துரத்துமாறு படகு செலுத்துகிறவனுக்கு ஆணையிட்டார். அருகில் நெருங்கியதும் தீப்பந்தங்களைக் கொளுத்தி அந்தக் கப்பலில் எறிய வேண்டுமென்றும் தம்முடன் இருந்த முரட்டு ஊழியர்களுக்கு அவசரம் அவசரமாக உத்தரவிட்டார்.
கப்பலின் மேலே தீப்பந்தங்களை எறிய வேண்டுமென்ற அந்த உத்தரவைக் கேட்டவுடனே படகோட்டி பதறிப்போய் ஏதோ சொல்ல வாய் திறந்தான். ஏற்கெனவே அவன் பாய்மரப் படகை வேகமாகச்