பக்கம்:மணி பல்லவம் 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

694

மணிபல்லவம்

யுடையவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே யாராவது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று திரும்பிப் போவார்களோ, வேண்டிய முத்துக்களைத் தேர்ந்தெடுக்கலாம் வாருங்கள்” என்று நிறைந்த உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை அழைத்தார். அவர்கள் இறங்கி வந்தார்கள்.

“நகைவேழம்பரே! எங்கே உங்களுடைய திறமை யைக் காட்டுங்கள், பார்க்கலாம். இவர்களுக்கு ஒளியிற் சிறந்த நல்ல முத்துக்கள் வேண்டும்” என்று பெருநிதிச் செல்வர் அவரை முதுகில் தட்டிக் கொடுத்தபோது அவருக்கு உள்ளே சினம் கொதித்தாலும் வெளிப்படையாக விட்டுக் கொடுக்க முடியவில்லை. முத்துக்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் குவியலுக்கருகே அவர் அமர்ந்து குனிந்தார். அந்தப் பெண்களும் அருகில் வந்து அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டார்கள்.

அரை நாழிகைக்குப் பின் அவர்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கி அனுப்பிவிட்டு, பெருநிதிச் செல்வர் நிலவறையில் நின்றிருந்த துணருகே அடக்க முடியாத ஆத்திரத்தோடு நகைவேழம்பர் திரும்பிப் பார்த்தபோது அங்கே அந்தத் தூண்தான் நின்றது. அதனருகே நின்றவரைக் காணவில்லை; வஞ்சக எண்ணத்தோடு அவர் தூணின் மறுபுறம் ஒளிந்திருக்கலாமோ என்று கைகளை ஓங்கிக்கொண்டு தூணின் பின்புறம் பாய்ந்தார் நகைவேழம்பர். தன்னால் ஆத்திரத்தோடு தேடப்பட்டவர் அப்போது அந்த நிலவறையின் எல்லையிலிருந்தே தப்பிப் போய்விட்டார் என்று நகை வேழம்பருக்குத் தீர்மானமாகத் தெரிந்தபோது தலை போகிற வேகத்தோடு பதறிப் பறந்து நிலவறையிலிருந்து வெளியேறும் படிகளில் தாவியேறினார் அவர். கடைசிப்படிக்கு அப்பால் கனமான இரும்புக் கதவு அடைக்கப்பட்டு, அது அடைக்கப்பட்டதனால் அந்த இடத்தில் இருளும் கனத்திருந்தது. தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். அதற்கு அப்பால் அவர் செல்ல வேண்டிய வழி மூடப்பட்டு இருண்டு போயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/85&oldid=1231516" இலிருந்து மீள்விக்கப்பட்டது