பக்கம்:மணி பல்லவம் 5.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

792

மணிபல்லவம்


‘இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே உனக்கு இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது’ என்று தன்னால் சற்றுமுன் இளங்குமரனிடம் கூறப்பட்ட வார்த்தைகளிலிருந்து அவன் எதையுமே எதிர்பார்த்துப் புரிந்து கொண்டு வியப்படையாமல் அமைதியாக நடந்து வருவதைக் கண்டு வளநாடுடையார் திகைத்தார். எல்லாப் பரபரப்பும் எல்லா ஆவலும் அவருக்குத்தான் ஏற்பட்டனவே தவிர அவன் உணர்ச்சிகளைக் கடந்த அமைதியோடும் நிதானத்தோடும் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய நிதானத்திலும் அமைதியிலும் சிறிது கழிவிரக்கமும் கலந்திருந்ததைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தைத் தான் உண்டாக்கிப் பேசியதாலேயே அவனுக்கு அந்தத் துயரம் தோன்றியிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் புரிந்து கொண்டார். படிப்படியாக முயன்று தன்னுடைய உட்கருத்தை அவன் விளங்கிக் கொள்வதற்கேற்ற மன நிலையை அவனிடம் தோற்றுவிக்கும் நோக்கத்தோடு மீண்டும் பேச்சுக் கொடுத்தார் அவர்:—

“தம்பி! இழந்த பொருள்களையும், இழந்த நல்லுணர்வுகளையும் திரும்பவும் அடைகிறவனுடைய பெருமையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

முன்பின் தொடர்பில்லாமல் கோடை மழையைப் போல் அமைதியை கலைத்துக்கொண்டு திடீரென்று இப்படிப் பேச்சைத் தொடங்கிய அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பின்பு மெல்லப் பதில் கூறினான் இளங்குமரன்.

“பொருள்களை இழப்பதற்காகத் துயரப்படுவதும், அடைவதற்காக மகிழ்க்கொள்ளுவதும் சிறிய காரியங்கள். நம்மோடு பற்றும் பாசமும் வைத்து நீண்ட உறவாகப் பழகிவிட்ட ஒருவரது உயிர் நம் கண் காண அழிந்தால் அதற்காக நாம் குமுறித் துக்கப்படுவதை மட்டும்தான் கைவிட முடிவதில்லை. அப்படி உயிர்த் தொடர்புடைய