பக்கம்:மணி பல்லவம் 5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

892

மணிபல்லவம்

"இப்போது இங்கிருந்து வெளியேறிச் செல்கிறாரே, இந்த ஆலமுற்றத்துப் பெரியவர் குறிக்கிட்டிராவிட்டால் நீங்கள் என்னைக் கீழே பிடித்துத் தள்ளியிருப்பீர்கள். அப்படித் தள்ளிவிட்ட பின்பு இன்னும் கொடுமையாக ஏதேனும் செய்து என்னை அழிக்கவும் முயன்றிருப்பீர்கள் அல்லவா? இப்போதும் உங்கள் முயற்சிக்குப் பழுதில்லை. நான் தனியாகத்தான் உங்கள் முன் நிற்கிறேன், எந்த விதமான கோபதாபங்களும் இல்லாமல், நீங்கள் அதிக பட்சமாக எனக்குச் செய்ய முடிந்த பெருங்கொடுமை எதுவாயிருந்தாலும் அதற்கு என்னை இலக்காக்கிக் கொள்ளத் துணிந்துதான் நிற்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் செய்யலாம்.”

இளங்குமாரனின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர் அவன் பக்கமாகத் திரும்பினார். அவ்வாறு திரும்பிய போது அவர் முகம் வெளிறினாற் போலப் பயந்து தோன்றியது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. முகத்திலும் கழுத்திலும் வேர்த்துப் பெருகியிருந்தது. பிச்சை கேட்டதுபோல் ஒடுங்கி நலிந்த குரலில் அவனருகே வந்து மன்றாடினார் அவர்.

“தயைகூர்ந்து நீ என் எதிரே நிற்காமல் போய்விடு! உன்னைப் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறது. உன் கண்களின் பார்வை கணத்துக்குக் கணம் நெருப்பாகி என்னைச் சுடுகிறது. உன்னுடைய சொற்கள் என்னைக் கொல்வதற்கு முன் உன் பார்வையே கொன்றுவிடும்போல் இருக்கிறது. நான் என் வாழ்வில் இப்படிப்பட்ட எதிரியை இதுவரை சந்தித்ததில்லை. என் மனம் உன் முன்னால் பதறி நடுங்குகிறது. எனக்குள்ளேயே ஏதோ நெருப்பு மூண்டதுபோல் பற்றி எரிகிறது. நீ சொல்லியது உண்மை தான். எப்படி வாழக்கூடாதோ அப்படி நான் வாழ்ந்து விட்டேன். இப்படி வாழ்ந்துவிட்டதைப் பாராட்ட முடியா விட்டாலும் மன்னிக்க முடியும் என்று நீ சொல்கிறாய். ஆனால் உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள எனக்குத் துணியவில்லை. நான் மன்னிப்பதற்குக் கூடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/110&oldid=1231840" இலிருந்து மீள்விக்கப்பட்டது