பக்கம்:மணி பல்லவம் 5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. முடியாத கோலம்

விடிகின்ற நேரத்துக்கே உரிய சில்லென்ற குளிர் காற்று உடம்பில் பட்டு இளங்குமரன் கண்விழித்தான். மரத்தடியில் பொற்காசுகள் சிதறினாற்போல் மகிழம் பூக்கள் உதிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. விடியப் போகிறது, விடியப் போகிறது என்று ! இந்த உலகத்துக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி மங்கல வாழ்த்தெடுப்பது போலப் பறவைகள் காலைக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. கதிரவனின் முதற்கதிர்கள் மண்ணில் படுவதற்குள்ளேயே நீராடித் தவ ஒழுக்கங்களை முடித்து விடும் ஆவலோடு காவிரிக்குச் செல்லத் தொடங்கியிருந்த அந்த நகரத்து மறையவர்களின் மந்திர ஒலிகளும், பெளத்தர்களின் அற முழக்கமும் அங்கங்கே பூம்புகாரின் வீதிகளிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருந்தன. இன்னும் இருள் புலரவில்லை. அறிந்தும் அறிய முடியாதபடி தெரிந்தும் தெரியமுடியாதபடி பேதை இருட்டு என்பார்களே அப்படி எங்கும் ஓர் இருட்டு சூழ்ந்திருந்தது. வழக்கம்போல் இந்த வேளையில் இளங்குமரனுக்குக் கண்கள் விழித்துக் கொண்டன. எழுந்திருந்து நீராடப் போவதற்கு ஆசையாயிருந்தது. ஆனால் எழுந்திருப்பதற்கும் முடியவில்லை.

“தாயோடு ஒன்றிக் கொண்டு உறங்கும் சிறு குழந்தை போல் சுரமஞ்சரி அவனுடைய வலது தோளைத் தன் தலைக்கு அணையாகக் கொண்டு குளிருக்கு ஒடுங்கினாற் போல் ஆழ்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்தாள். ஏழு உலகங்களையும் வென்று ஆளும் இணையற்ற வெற்றி போல் கவலையில்லாமல் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்தபோது அவளுடைய உறக்கத்தைக் கலைக்கும் துணிவை இழந்து அப்படியே அசையாமல் இருந்தான் இளங்குமரன். அவளுடைய எழில் நிறைந்த உடல் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/133&oldid=1231863" இலிருந்து மீள்விக்கப்பட்டது